கேன்பரா: உள்ளூரில் முதல் கொவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசம் கொவிட்-19 கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது.
வடக்குப் பிரதேச முதல்வர் மைக்கல் கன்னர் இதனை நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) அறிவித்தார்.
மாநிலத் தலைநகர் டார்வினுக்கு தெற்கே 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கேத்தரின் நகரில் ஆடவர் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இருபதுகளில் உள்ள அவர் தடுப்பூசி போட்டிராதவர்.
அந்த ஆடவர் அண்மையில் மாநிலத்திற்கு வெளியே பயணம் மேற்கொள்ளவில்லை என்று திரு கன்னர் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.
இதையடுத்து, தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்ட கேத்தரின் நகர், நேற்று நள்ளிரவு தொடங்கி 72 மணிநேரம் முடக்கப்பட்டுள்ளது.