வீட்டில் குணமடைவதற்கான வயது வரம்பு ஐந்தில் இருந்து மூன்றாகக் குறைப்பு

இல்லச் சூழல் உகந்ததாக இருந்தால், கொரோனாவால் பாதிக்கப்படும் மூன்று வயதும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் வீட்டில் இருந்தபடியே குணமடையலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீட்டிலிருந்தபடியே குணமடைவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஐந்தில் இருந்து மூன்றாகக் குறைக்கப்படுகிறது.
நாளை மறுநாள் 10ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து இது நடப்பிற்கு வரவுள்ளது.
வீட்டுச் சூழல் உகந்ததாக இருந்தால் மூன்றும் அதற்குமேல் வயதுடையோரும் வீட்டில் இருந்தபடியே கொரோனா தொற்றிலிருந்து தேறலாம் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்துள்ளது.
சமூகம் அல்லது மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் ஒருவர், அக்குழந்தைகளைத் தொலைமருத்துவ முறைமூலம் மதிப்பீடு செய்வார்.
மூன்று மாதம் முதல் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளும் கொரோனா தொற்றும் பட்சத்தில் வீட்டில் இருந்தவாறே குணமடைய அனுமதிக்கப்படுவர். அதற்கு, அவர்கள் வீட்டிலேயே குணமடையப் பொருத்தமானவர்கள் என்று மருத்துவமனைகளில் மருத்துவரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளை கொரோனா தொற்றினால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தொடரும்.