புதுடெல்லி: உலகளாவிய தடுப்பூசிப் பகிர்வுத் தளமான கோவேக்சிடம் இன்னும் ஒரு சில வாரங்களில் கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா அனுப்பிவைக்கக்கூடும்.
இந்த விவகாரம் அறிந்த இரு தரப்புகள் இதனைத் தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசிகள் அனுப்புவதை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொவிட்-19 தொற்று அதிகரித்ததால் உள்நாட்டுத் தேவைக்கு தடுப்பூசிகள் தேவைப்பட்டதே அதற்குக் காரணம். இதனால், தடுப்பூசிப் பற்றாக்குறையால் பல ஏழை நாடுகள் அவதியுறுகின்றன.
‘கோவேக்ஸ்’ திட்டத்தை வழிநடத்தும் உலக சுகாதார நிறுவனம், மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசிகள் அனுப்புவதை மீண்டும் தொடங்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்தி வந்தது.
கடந்த அக்டோபர் மாதம், இந்தியா அதன் அண்டை நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏறத்தாழ நான்கு மில்லியன் தடுப்பூசி அளவை அனுப்பிவைத்தது.