சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 169 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சிங்கப்பூர் சிறைத்துறை தெரிவித்துள்ளது. இது கடந்த புதன்கிழமை வரையிலான நிலவரம்.
அவர்களில் 116 பேர் சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ‘ஏ1’ நிலையத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மரண தண்டனைக் கைதிகளும் அடங்குவர்.
அந்நிலையம் தற்காலிகமாக முடக்கநிலையின்கீழ் வைக்கப்பட்டுள்ளது.
அந்த 116 பேர்க்கும் இம்மாதம் 6 ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிக்குள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்திற்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்கான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
மேலும், மேற்பார்வையின்கீழ் சமூகம் சார்ந்த திட்டங்களில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் 54 பேரையும் சிறைத்துறை பணியாளர்கள் ஒன்பது பேரையும் கொரோனா தொற்றியிருப்பதாகச் சிறைத்துறை தெரிவித்தது.
மரண தண்டனைக் கைதிகளைத் தவிர்த்து, மற்றக் கைதிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நேருக்கு நேர் சந்திப்பது கடந்த மாதம் 4ஆம் தேதியில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
மாறாக, தொலைபேசி வாயிலாக அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.