நோம்பென்: கொவிட்-19 தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்தபோது அதிக அளவில் மெத்தனால் கலந்திருந்த மதுவைக் குடித்ததில் குறைந்தது எழுவர் இறந்துவிட்டனர்; 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்போடியாவின் வடமேற்கு மாநிலமான பன்டே மியான்ச்சியில் இச்சம்பவம் நிகழ்ந்ததை சுகாதாரத் துறையின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய தொழிலாளர்கள். அவர்கள் பாய்பெட் நகரில் உள்ள ஒரு மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலையில் இடம்பெற்ற ஒன்றுகூடலின்போது அவர்கள் மது அருந்தினர். அதன்பின் அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மயக்கம், தலைவலி ஏற்பட்டதாகவும் மறுநாள் ‘கோமா’ நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
“இதுவரை பெண் ஒருவர் உட்பட எழுவர் இறந்துவிட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது,” என்று ரோவன் சோதி என்ற அந்தப் பேச்சாளர் சொன்னதாக ‘ஸின்ஹுவா’ செய்தி வெளியிட்டுள்ளது.
மது, ஆற்றல் பானங்கள், பசுந்தேநீர் ஆகியவற்றைக் கலந்து குடித்ததாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருசிலரும் மூலிகை அரிசி ஒயினைக் குடித்ததாக வேறுசிலரும் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
அவையனைத்தும் சேர்ந்து நஞ்சாக மாறிவிட்டது முதற்கட்டப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.