டிசம்பர் 3ஆம் தேதி முதல், விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 3,000 பேர் வரை அன்றாடம் பொது இடங்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படும். அவர்கள் அனைவரும் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
வாராந்திர அடிப்படையில் பார்த்தால், இந்த எண்ணிக்கை 21,000 பேர் ஆகும். தற்போது இது வாரத்திற்கு 3,000ஆக உள்ளது.
லிட்டில் இந்தியா அல்லது கேலாங் சிராய்க்கும் மட்டுமே செல்ல முடியும் எனும் கட்டுப்பாடு இனி அவர்களுக்கு இருக்காது. அவர்கள் விரும்பும் இடத்துக்குச் செல்லலாம்.
இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் இங்குள்ள பொழுதுபோக்கு நிலையங்களுக்கு அன்றாடம் சென்றுவரலாம். தற்போது அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்படுகிறது.
மேலும், பொழுதுபோக்கு நிலையங்களில் அவர்கள் எட்டு மணி நேரம் வரை இருக்கலாம். தற்போது, அவர்கள் நான்கு மணி நேரம் மட்டும் அங்கிருக்க முடிகிறது.
தீவு முழுவதும் எட்டு பொழுதுபோக்கு நிலையங்கள் உள்ளன. தற்போது, ஊழியர்கள் குறிப்பிட்டதொரு நிலையத்திற்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
டிசம்பர் நடுப்பகுதி முதல், ஊழியர்கள் எட்டு நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று வரலாம்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 15) பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இத்தகவலைத் தெரிவித்தார்.