வியன்னா: ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து கட்டாயமாக்கப்படவுள்ளது.
அதன்பின்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் 3,600 யூரோ (S$5,500) வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆஸ்திரியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதை அடுத்து, அங்கு இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கநிலை நடப்பிற்கு வந்துள்ளது.
இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர்க்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாய்ப்பை ஏற்க மறுப்போர்க்கு அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்போர்க்கும் 1,500 யூரோ (S$2,300) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கவிருக்கும் முதல் மேற்கு ஐரோப்பிய நாடு ஆஸ்திரியா. அங்கு தகுதியுள்ளோரில் இதுவரை கிட்டத்தட்ட 66 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தேசிய அளவிலான முடக்கநிலை உட்பட அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.