புவனேஸ்வர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களில் பள்ளி மாணவிகள் 53 பேரும் ‘எம்பிபிஎஸ்’ மாணவர்கள் 22 பேரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை 70 குழந்தைகள் உட்பட மேலும் 212 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,047,386ஆக உயர்ந்தது. கிருமித்தொற்றால் மேலும் இருவர் இறந்துவிட, உயிரிழப்பு 8,396 ஆனது.
“பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சிறப்புக் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை இயல்பாக இருக்கிறது. பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது,” என்று செயின்ட் மெரி பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் 8, 9, 10ஆம் வகுப்புகளில் பயில்பவர்கள்.
இதனிடையே, புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துக் கல்லூரியில் கொரோனா தொற்றிய 22 மருத்துவ மாணவர்களும் கொவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கல்லூரியில் அண்மையில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது கொரோனா பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் ஐயப்படுகின்றனர்.