உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு 2022 ஜனவரி 10ஆம் தேதியில் இருந்து உலக நாடுகள் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
பயணம் செய்வதற்கான கொவிட்-19 தடுப்பூசி செல்லுபடிக் காலத்தை ஒன்பது மாதங்களாக அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அந்த ஒன்பது மாத காலத்திற்குப் பிறகு கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அது ஆலோசனை தெரிவித்துள்ளது.
அதனுடன், தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்து இருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள், ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்லாது, உலக நாடுகளுக்குமான பயணங்களையும் உள்ளடக்கும்.
தற்போது ஐரோப்பிய நாடுகள் நான்காவது கொரோனா அலையைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.
இதன் எதிரொலியாக, தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லாவிடினும் 2022 மார்ச் 1ஆம் தேதியிலிருந்து அனைத்துப் பயணிகளையும் அனுமதிக்கும் திட்டத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.
அந்தத் தேதியில் இருந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது அத்தொற்றிலிருந்து மீண்ட, ஐரோப்பிய ஒன்றிய மின்னிலக்க கொவிட்-19 சான்றிதழ் அல்லது அதற்கு இணையான அனுமதி அட்டைகளை வைத்துள்ளோர் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய முடியும்.