ஒமிக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக, ‘தொற்று அபாயம் அதிகம்’ உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவின் ஆறு விமான நிலையங்களில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) முதல் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள முன்பதிவு கட்டாயமாகிறது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.
டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியன அந்த ஆறு விமான நிலையங்கள்.
அதன்படி, பயணிகள் வந்திறங்கும் அந்தந்த விமான நிலையத்தின் இணையப் பக்கத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்துள்ளனரா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட ஆறு விமான நிலையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு முன்பதிவு செய்துகொள்ளும் நடைமுறை சுமூகமான பிறகு, இந்த விதிறை இந்தியாவின் மற்ற விமான நிலையங்களுக்கும் கட்டாயமாக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.