புதுடெல்லி: இவ்வாண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 87 பில்லியன் அமெரிக்க டாலர் (S$118 பி., ரூ.645,544 கோடி) பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் 20 விழுக்காட்டிற்குமேல் அமெரிக்காவில் இருந்து சென்றதாக உலக வங்கி நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
“உலகிலேயே இந்தியாவிற்குத்தான் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பணம் அனுப்பிவைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 83 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் அந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் அத்தொகை அதைவிட 4.6% கூடுதலாக, அதாவது 87 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவ்வறிக்கை தெரிவித்தது.
தாய்நாட்டிற்குப் பணம் அனுப்பிவைப்பதில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக சீனா, மெக்சிகோ, பிலிப்பீன்ஸ், எகிப்து ஆகிய நாட்டினர் உள்ளனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வரும் 2022ஆம் ஆண்டில் 89.6 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைத் தாய்நாட்டிற்கு அனுப்பிவைப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது.