இசையுலகை ஆளும் இசைஞானி இளையராஜாவிற்கு மேலும் ஒரு கௌரவம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தின் மிகப் பெரிய விளம்பரப் பலகையில் இசைஞானியின் படத்துடன் கூடிய விளம்பரக் காணொளி நேற்று 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
அதுகுறித்த புகைப்படங்களையும் காணொளியையும் தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் இசைஞானி.
‘ஸ்பாட்டிஃபை (Spotify)’ இசை ஒலிபரப்புச் சேவையும் இசைஞானியும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பரம் ஒளிபரப்பானது.
இதனால் இசைஞானியின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தச் சாதனை, தம் தந்தையின் இசைப் பயணத்தில் ஒரு படிக்கல் என்று கூறியுள்ளார் இசைஞானியின் மூத்த மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா.
இந்த விளம்பரம் குறித்த காணொளியைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், “நம் எல்லாரையும்விட அவர் எப்போதுமே உயரத்தில் இருக்கிறார். அவர்தான் எப்போதுமே முதன்மையானவர், ஆகப் பெரியவர். டைம்ஸ் சதுக்க விளம்பரப் பலகையில் ராஜா அப்பாவைக் காண்பதில் பெருமகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.