கடல்கடந்து சிங்கப்பூரை பாதுகாக்கும் வீரர்கள்

இர்ஷாத் முஹம்மது

கடல்வழி வணிகத்தை அதிகம் சார்ந்திருக்கும் நாடு சிங்கப்பூர். உலகளவில் நடைபெறும் வர்த்தகத்திற்கு சிங்கப்பூர் வழி சரக்குக் கப்பல்கள் அதிக எண்ணிக்கையில் தினந்தோறும் வந்துபோகும் நிலையில் அதற்கு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்பகுதி மட்டும் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும் என்றில்லை.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அருகிலுள்ள 'கல்ஃப் ஆஃப் ஏடன்' எனும் கடற்பகுதியைப் பாதுகாப்பானதாக வைத்துக்கொள்வதும் சிங்கப்பூருக்கு அவசியம் என்று கூறினார் சிங்கப்பூர் கடற்படையில் 28 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் எம். இ. 3 அதிகாரி திரு சிவலிங்கம் அனைத்துலக அளவில் பிரதான கடல்வழி வர்த்தகத்திற்கு 'கல்ஃப் ஆஃப் ஏடன்' கடற்பகுதி பயன்படுத்தப்படுகிறது.
அந்தப் பகுதியைப் பாதுகாக்கும் அனைத்துலக ஒருங்கிணைந்த கடற்படையைச் சிங்கப்பூர் ஐந்தாவது முறையாக வழிநடத்தி கடந்த மாதம் 27ஆம் தேதிக் குவைத் நாட்டிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெகு தூரத்தில் அந்தப் பகுதி இருந்தாலும் அப்பகுதியின் பாதுகாப்புச் சிங்கப்பூருக்கு வரும் கடற்பாதைக்கு முக்கியம் என்று திரு சிவலிங்கம் தெரிவித்தார்.


இரு இளம் மகன்களுக்குத் தந்தையான அவர் கடந்த சுமார் ஓராண்டாக தனது குழுவினருடன் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 'கல்ஃப் ஆஃப் ஏடன்' பகுதியில் கடற்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
குடும்பத்தை விட்டு நெடுங்காலத்திற்கு வெளிநாட்டில் தனது தாய்நாட்டிற்காக சேவை செய்யும் பல ராணுவ வீரர்களில் 47 வயது திரு சிவலிங்கமும் ஒருவர். 2009ஆம் ஆண்டு இந்த அனைத்துலகப் படையில் சிங்கப்பூர் அங்கம் வகித்ததிலிருந்து இதுவரை 1,400 சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐந்து தளபத்தியக் குழுக்கள், ஐந்து பணிக் குழுக்கள், அவை ஒவ்வொன்றுக்கும் ஹெலிகாப்டர்களுடனான கப்பல்கள், 'எஃப் 50' ரக கடற்பாதுகாப்பு விமானம் முதலியவற்றையும் சிங்கப்பூர் வழங்கியுள்ளது.
நாட்டுப்பற்றுடன் சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கு உழைக்கும் திரு சிவலிங்கத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பவர்கள் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும்.


தமது வேலையின் நிபந்தனைகளை உணர்ந்து அவரது கடமைக்கு உந்துதலாக இருப்பவர் அவரது மனைவி. கணவர் நாட்டில் இல்லாதபோதும் குடும்பத்தை அவர் நன்கு நடத்திவருவதாக திரு சிவலிங்கம் கூறினார். உறவினர்களும் தனது குடும்பத்திற்குப் பக்கபலமாக இருந்துவருவதால் அவர் தமது பணியில் கவலையின்றி கவனம் செலுத்தமுடிவதாகச் சொன்னார். 32 நாடுகளின் ஒருங்கிணைந்த கடற்படையின் கீழ் 'சிடிஎஃப் 151' எனும் ஒருங்கிணைந்த பணிக்குழு கடற்கொள்ளைச் சம்பவங்களை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் தலைமையகம் பஹ்ரைன் நாட்டில் உள்ளது. இக்குழுவின் தகவல், தரவு ஆய்வாளராக திரு சிவலிங்கம் செயல்படுகிறார்.


"நாங்கள் இயங்கிவரும் இந்த மத்திய கிழக்குக் கடற்பகுதியில் ஏற்படும் முக்கிய மேம்பாடுகள் குறித்தும் நிலவரம் குறித்தும் எனது தளபதிக்கும் குழுவினருக்கும் தெரியபடுத்துவது எனது முக்கிய பணி," என்றார் அவர். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு இதே பணியில் வேறொரு பொறுப்பில் பணியாற்றினார். அந்தக் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படையினருக்கு வேண்டிய கப்பல்கள், விமானங்கள் தொய்வில்லாமல் பயிற்சிக்கு இருக்கிறதா என்று உறுதிசெய்யவேண்டிய பொறுப்பில் முன்பு இயங்கிவந்தார் திரு சிவலிங்கம். "வேறொரு பொறுப்பை ஏற்று இம்முறை இந்தப் பணிக்குழுவில் உள்ளேன். அதைத் தவிர பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றும் இல்லை," என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் பணிக்காக வருவதற்கு முன்னர் பல மாதங்கள் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்கெனவே இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தோர் எங்களைத் தயார்படுத்தினார்கள். அவர்கள் கற்றுகொண்ட விஷயங்கள், கவனத்தில் கொள்ளவேண்டியவை போன்ற தகவல்கள் எங்களுக்கு வழங்கப்பட்டதால் மனரீதியாக நாங்கள் எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம்," என்று அந்தக் கடற்படை வீரர் கூறினார்.
பன்னாட்டு அதிகாரிகளுடன் சேர்ந்து பணிபுரிவது குறித்துக் கருத்துரைத்த திரு சிவலிங்கம், "ஒவ்வொருவரும் வெவ்வேறு அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் எண்ணங்களையும் கொண்டுள்ளனர். அவர்களது அறிவாற்றலைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்வந்தனர். அனைவருடனும் இணைந்து செயல்படுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!