தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை: சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்

 

ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கி வரும் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அத்தடுப்பூசி தயாரிப்பில் அங்கம் வகிக்கும் இந்திய சீரம் நிலையத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனவாலா தெரிவித்துள்ளார்.

“ஏற்கெனவே 40 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. வரும் ஜனவரி மாதத்திற்குள் குறைந்தபட்சம் 100 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவிடும்,” என்று திரு பூனவாலா கூறியுள்ளார்.

ஒரு தடுப்பூசி கிட்டத்தட்ட 250 ரூபாய் எனும் விலைக்கு சீரம் நிறுவனத்தினுடைய 90% தடுப்பூசிகள் இந்திய அரசாங்கத்திற்கு விற்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

எஞ்சிய பத்து விழுக்காடு தடுப்பூசிகள் அதிக விலைக்கு, அதாவது ஒரு தடுப்பூசி கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குத் தனியார் சந்தையில் விற்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்களது தடுப்பூசியை 23,000 பேரிடம் பரிசோதித்துப் பார்த்ததில் அது சராசரியாக 70% செயல்திறன்மிக்கதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆக்ஸ்ஃபர்ட்-ஆஸ்ட்ரா செனகா நிறுவனங்கள் நேற்று தெரிவித்தன.

மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போல் அல்லாமல், ஆக்ஸ்ஃபர்ட் தடுப்பூசியை இயல்பான குளிர்பதன வெப்பநிலையில் எடுத்துச் செல்ல முடியும் எனக் கூறப்பட்டது.

எஞ்சிய ஒழுங்குமுறைத் தடைகளையும் கடந்துவிட்டால் 2021ஆம் ஆண்டில் மூன்று பில்லியன் தடுப்பூசிகள் வரை தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பதாக ஆஸ்ட்ராஸெனிக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

முன்னதாக, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 250-300 மில்லியன் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இந்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு ஒரு கோடி முன்கள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக அரசாங்க வட்டாரங்களைச் சுட்டி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வறுமையால் மருத்துவப் படிப்பைக் கைவிட்ட மாணவிகளுக்கு கைகொடுத்தது தமிழக அரசு

 

மாணவிகள் மூவருக்கு அவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைக் கட்டமுடியாத சூழலில் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெறாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த மாணவிகள் மூவருக்கும்  செலுத்தவேண்டிய கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இதனால் இந்த மாணவிகளின் மருத்துவம் படிக்கும் கனவு நனவாகி உள்ளது. 

கடந்த 18 முதல் 20ஆம் தேதி வரை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கடந்த 19ஆம் தேதி பங்கேற்ற  திருப்பூரைச் சேர்ந்த திவ்யா, ஈரோட்டைச் சேர்ந்த கெளசிகா, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தாரணி ஆகிய மூவரும் மருத்துவம் படிப்பதற்கு தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். 

ஆனால், அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெறாமல் மாணவிகள் சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த மாணவிகள் மூவரையும் மீண்டும் அழைத்த மருத்துவக் கல்வி இயக்ககம், எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூறி மாணவா் சோ்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை அவர்களிடம் திங்களன்று வழங்கியது.

இதுகுறித்து மாணவி கௌசிகா கூறுகையில், “கட்டணம் செலுத்துவதற்கான பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அனுமதிக் கடிதத்தைப் பெறாமல் சென்றுவிட்டோம். அதன்பின்னா் மருத்துவக்கல்வி இயக்ககம் எங்களை அழைத்து அனுமதியை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதால் எங்களது மருத்துவா் கனவு நனவாகியுள்ளது,” என்றாா்.

இதுகுறித்து, “போன உயிர் மீண்டும் வந்ததுபோல் உணர்கிறோம்,”  என்று கூறியுள்ளனர் மாணவிகள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

நிவர் புயல்: 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகள், தமிழகத்தில் பொதுவிடுமுறை

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நாளை (நவம்பர் 25) மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதாகத்   தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் புயல் பாதிப்பால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் வகையில்  சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகம் முழுவதும் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படும்.

“மருத்துவா்கள், தாதியா்கள் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் ஜெனரேட்டா் சாதனங்களைப் பழுதின்றி வைத்திருக்க வேண்டும். சுவா் இடிந்து விழுவது, இடி- மின்னல், பாம்பு, பூச்சிக் கடிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.  

கடந்த 2018ல் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலைப் போன்று நிவர் புயலும் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக மீட்புப் பணிகளில் ஈடுபட சென்னையில் இருந்து சீர்காழிக்கு 35 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்  குழுவினர் வந்துள்ளனர்.

இதற்கிடையே, புயல் நேரத்தில் அதிகாரபூர்வ தகவல்களை மட்டுமே மக்கள் அறிந்துகொள்ளும்படியும் சமூக ஊடகத் தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் என்றும்  வருவாய்,  பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள தாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை எழிலகத்தில் இருந்து முதல்வர் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

மலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் 2,188 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று (நவம்பர் 24) பதிவானது. நேற்று 1,882 பேருக்கு தொற்று பதிவானதே ஆக அதிக எண்ணிக்கையாகக் கருதப்பட்ட நிலையில் புதிய  உச்சமாக 2,000க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் நால்வர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மலேசியாவில் கொவிட்-19ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 341ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பு கண்டோரின் மொத்த எண்ணிக்கை 58,847 ஆனது. தற்போது 14,353 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் டெராடாய் குழுமத்தில் பதிவாகின. சிலாங்கூரில் இருக்கும் ‘டாப் குளோவ்’ கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் டெராடாய் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்தப் பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பல மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார உதவிக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சாபாவில் கிருமித்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பாஹாங், திரங்கானு, புத்ரஜெயா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை.

இன்று பதிவான அனைத்து கிருமித்தொற்று சம்பவங்களும் உள்ளூரில் பரவியவை.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக 26 வயது பங்ளாதேஷ் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இம்மாதம் 2ஆம் தேதி கைது செய்யப்பட்ட அகமது ஃபைசாலிடம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சுயதீவிரவாதத்துக்குட்பட்ட அகமது ஃபைசால், தமது சமயத்துக்கு ஆதரவாக ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபட நினைத்திருந்ததாக இன்று (நவம்பர் 21) உள்துறை அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

முஸ்லிமான ஃபைசால், பங்ளாதேஷிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு கட்டுமான ஊழியராக வந்தார். ஐஎஸ் அமைப்பின் இணையவழிப் பிரசாரத்தின் மூலம், அதற்கு அடுத்த ஆண்டு சுயதீவிரவாதக் கொள்கைகளைக் கைக்கொண்டார்.

தாம் அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்க, அவர் புனைப்பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கினார்; ஆயுதம் தாங்கிய வன்முறை தொடர்பான தகவல்களை அந்தக் கணக்குகளின் மூலம் பரப்பினார் ஃபைசால்.

தம் சொந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதற்காக மடக்கக்கூடிய கத்திகளையும் வாங்கியதாக அவர் விசாரணையின்போது அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.

ஆனால், தற்போது வரையிலான விசாரணைகளில், அவர் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்தும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

இந்த கத்திகளை பங்களாதேஷுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள இந்து போலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த ஃபைசால் எண்ணம் கொண்டிருந்ததாக, இன்று நடைபெற்ற சமய மறுவாழ்வு குழுவின் (RRG) 16வது வருடாந்திர கருத்தரங்கில் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

 பயங்கரவாதத்துக்கு ஃபைசால் நிதியுதவி செய்தாரா என்பது பற்றி வர்த்தக விவகாரத் துறை விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் திரு சண்முகம் தெரிவித்தார்.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர், உள்துறைப் பாதுகாப்புத் துறையின் விசாரணைகளுக்குப் பிறகு, மேலும் 15 பங்ளாதேஷ் நாட்டவர், ஒரு மலேசியர் ஆகியோர் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். பிரான்சுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டதற்காகவும் வன்முறையைத் தூண்டி சமூக கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததற்காகவும் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், பிரான்சில் கடந்த மாதம் நிகழ்ந்த தாக்குதல்களுடன் ஃபைசாலுக்குத் தொடர்பு இல்லை என உள்துறை அமைச்சு தெரிவித்தது.

ஆனால், ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அங்கு சென்று சிரியா அரசாங்கத்துடன் போரிட விரும்பியதாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சிரியாவில் போரிடும் மற்றொரு போராளி அமைப்பான ஹயட் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்புக்கு உதவும் நோக்கில் ஃபைசால் நன்கொடை அளித்ததாகவும், அல்-காய்தா, அல்-ஷபாப் உட்பட மற்ற பயங்கரவாத குழுக்களுக்கு தம் ஆதரவைத் தெரிவித்ததாகவும் அமைச்சு தெரிவித்தது.

சிரியாவுக்கு மட்டுமின்றி, காஷ்மீருக்கும் சென்று இஸ்லாம் சமயத்தின் எதிரியாக  அவர் கருதுபவர்களுடன் போரிடவும் விரும்பி, ஆயுதங்கள் தொடர்பான காணொளிகளையும் அவர் இணையத்தில் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொவிட்-19; இரண்டு வாரங்களாக உள்ளூரில் கிருமித்தொற்று இல்லை

புதிதாக 18 பேருக்கு இன்று (நவம்பர் 14) கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

சமூகத்திலோ ஊழியர் தங்கும் விடுதியிலோ 14 நாட்களாக எந்த ஒரு புதிய கிருமித்தொற்று சம்பவமும் பதிவாகவில்லை. சமூகக் கிருமித்தொற்று ஏதும் இல்லாத ஆக நீண்ட இடைவெளி இதுவே.

புதிய சம்பவங்களைச் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 58,183 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட 18 நோயாளிகளுக்கு சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

புதிய கிருமித்தொற்று நோயாளிகளில் இரண்டு சிங்கப்பூரர்களும் 14 வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரும் அடங்குவர். இதில் 13 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் என்று கூறப்பட்டது.

நேற்று ஐந்து புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகின. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். தொற்றுக்கான அறிகுறி ஏதும் அவர்களிடம் காணப்படவில்லை. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர், இந்தியாவிலிருந்து திரும்பிய 16 வயது சிங்கப்பூரர். மூவர் இந்தோனீசியாவிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு உடையவர்கள். எஞ்சிய ஒருவர் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்பவர். 58 வயதான அந்த ஆடவர் பிரான்சிலிருந்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

திங்கட்கிழமை நிலவரப்படி 58,056 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 36 பேர் மருத்துவமனையிலும் 30 பேர் சமூக வளாகங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் கடுமையான பாதிப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிங்கப்பூர் நீரிணையில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்தன

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் சிங்கப்பூர் நீரிணையில் அதிகமான கடற்கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

கடந்த வாரம் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களுடன் சேர்த்து இதுவரை 33 கடற்கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 

ஒப்புநோக்க, கடந்த ஆண்டு முழுமைக்கும் சிங்கப்பூர் நீரிணையில் நிகழ்ந்த கடற்கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை 31. 

கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகளுக்கு எதிரான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டு அமைப்பு, கப்பல் தொழில்துறைக்கு நேற்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, சிங்கப்பூர் நீரிணையில் நிகழ்ந்து வரும் கடற்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டது. 

சிங்கப்பூர் தீவுக்குத் தெற்கே அமைந்துள்ள 105 கிலோ மீட்டர் தூரமுள்ள சிங்கப்பூர் நீரிணை, வர்த்தகத்துக்கு ஒரு முக்கிய நீர்பாதையாக விளங்குகிறது. 

அது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்கிறது. 

இம்மாதம் 17ஆம் தேதி மூன்று கடற்கொள்ளையர்கள் சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ‘ஏஷியா ஸ்பிரிங்’ எனும் சரக்குக் கப்பலுக்குள் நுழைந்தனர். 

அப்போது கப்பலின் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, சிப்பந்திகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த மூவரும் கப்பலிலிருந்து தப்பித்து விட்டனர். 

சிங்கப்பூர் குடிரயசு கடற்படையின் கடற்துறை பாதுகாப்புப் பணிக்குழு, சிங்கப்பூர் போலிஸ் கடலோரக் காவற்படை ஆகியவற்றுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

அதேபோல், இம்மாதம் 19ஆம் தேதி சீனாவை நோக்கிச் சென்ற ‘எம்டிஎம் ஆம்ஸ்டர்டாம்’ எனும் ரசாயனம் மற்றும் எண்ணெய்க் கப்பலின் பின்புறம் வழியாக கத்திகள் ஏந்திய இருவர் நுழைந்தனர். எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு சிப்பந்திகள் அழைக்கப்பட்டவுடன் அவர்கள் இருவரும் தப்பினர். 

மேற்கூறப்பட்ட இரு கப்பல்களும் பின்னர் எவ்வித தடையுமின்றி சீனாவுக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரி மீது கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டுகள்

இரு வெளிநாட்டுப் பெண்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு உதவி செய்த குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரி ஒருவர் அவர்களிடமிருந்து பாலியல் சேவைகளையும் கையூட்டையும் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது இன்று (நவம்பர் 24) குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

டியோ ஹுவி பெங் என்ற அந்த 47 வயது அதிகாரியுடன் சீன நாட்டவர்களான 37 வயது லியாங் சிங்லான், 32 வயது செங் வென்ஹுவான் ஆகிய இரு பெண்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

டியோ மீது 12 குற்றச்சாட்டுகளும் லியாங், செங் மீது முறையே ஒன்பது, 18 குற்றச்சாட்டுகளும் பாய்ந்தன.

தங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை பெற்றுத் தந்தால் டியோவுக்குப் பாலியல் சேவைகள் வழங்குவதாக லியாங்கும் செங்கும் அவரிடம் கூறினர். 

2018 முதல் கடந்த ஆண்டு வரை லியாங், டியோவுக்கு பாலியல் சேவைகளையும் $2,100 ரொக்கமும், 188.88 யுவான் ($39) அடங்கிய ரொக்க அன்பளிப்பு பொட்டலத்தையும் 7000 யுவான் மதிப்புள்ள கடனையும் வழங்கினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

செங், கடந்த ஆண்டு ஜூலையில் வெவ்வேறு சமயங்களில் டியோவுக்கு பாலியல் சேவைகளும் $1,500 ரொக்கமும் அளித்தார் என்று கூறப்பட்டது. 

டியோ, செங், லியாங் ஆகியோர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாடப் போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

வர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு

சிங்கப்பூரின் பிரபலமான வர்த்தகரும் சமூக தலைவருமான திரு அமீரலி ஆர். ஜுமபோய் இன்று (நவம்பர் 24) காலை தமது 94வது வயதில் காலமானார்.

1982ஆம் ஆண்டில் திரு அமீரலி தொடங்கிய ஸ்காட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்காட் கடைத் தொகுதி, எஸ்கோட் சேவிஸ்ட் ரெசிடன்சஸ் கொகுசு குடியிருப்பு செயல்பட்டன.

பின்னர் 1992ல் ஸ்காட் ஹோல்டிங்ஸ் கேப்பிட லாண்ட் நிறுவனத்திடம் விற்கப்பட்டது. 

“தொலைநோக்குடைய வர்த்தக முன்னோடியான திரு அமீரலி, ஓர் அன்பான கணவராக, தாத்தாவாக, பாட்ட னாராகத் திகழ்ந்தார்,” என்று அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது. 

சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபை கடந்த ஆண்டு திரு அமீரலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தது.

வர்த்தக உலகின் ஜாம்பவானாக மட்டும் இல்லாமல் திரு அமீரலி, மெண்டாக்கி, முயிஸ், தேசிய குற்றத்தடுப்பு மன்றம், தேசிய இளையர் சாதனையாளர் விருது மன்றம் என பொதுச் சேவையிலும் அதிக ஈடுபாடு காட்டினார். 

திரு அமீரலிக்கு நான்கு பிள்ளைகள், 11 பேரப்பிள்ளைகள், ஒரு கொள்ளு பேரப்பிள்ளை ஆகியோர் உள்ளனர்.

திரு அமீரலியின் மனைவி திருமதி அமினா 1992ல் மாரடைப்பால் காலமானார். திரு அமீரலியின் நல்லுடல் இன்று சுவா சூ காங் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

நடிகர் தவசி காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி,  சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 23) உயிரிழந்தார்.

முரட்டு மீசை, கம்பீர தோற்றத்துடன் நகைச்சுவை கலந்து திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு 8.15 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் உறுதிப்படுத்தினார்.

தமிழில் அவர் சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக நடித்தது இன்றளவும் மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். 

ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது விபத்தில் சிக்கிய தவசிக்கு புற்று நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவருக்கு புற்று நோய் தீவிரம் அடைந்ததால் அவரது உடல் மெலியத் தொடங்கியது. எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளித்த தவசியின் புகைப்படமும் உதவி கோரிய அவரது காணொளியும் சமூக ஊடகங்களில் பெரிதும் பரவியது.

இந்த நிலையில், மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்எல்ஏ சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் தவசி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இலவச சிகிச்சை தருவதாக எம்எல்ஏ சரவணன் தெரிவித்திருந்தார்.

அவருக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு ஆகியோர் உதவி செய்தனர். 

தமது காணொளியில், தமிழ் துணை நடிகர்களுக்கு மருத்துவ வசதி வழங்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களின் துயர் துடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

தவசியின் உடல் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு திங்கட்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது.

பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய தவசி, கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon

Pages