அமமுக: திமுகவுக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டோம்

நெல்லை: திமுக ஒருவேளை ஆட்சியமைக்க நேரிட்டால் ஒருபோதும் நாங்கள் அக்கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். பாளையங்கோட்டையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இபிஎஸ் =- ஓபிஎஸ் நடத்தும் துரோக ஆட்சிக்கு முடிவு கட்டி, தமிழகத்தில் அம்மா வழியில் அமமுக ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்து அதிமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நான் கேட்டதுபோல் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தனர்.

"துரோகிகள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டேன்.

"அதேதான் தற்போது நடைபெறுகின்ற தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம் கேட்கிறேன்.

"மீண்டும் ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

"தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். 

"ரகசிய கூட்டுக்கு வாய்ப்பே இல்லை என்பதற்குத்தான் இதனைக் கூறுகிறேன்.

"பழனிசாமி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் கண்டிப்பாக அதில் நாங்களும் சேர்ந்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். 

"தமிழகம் முழுவதும் பரிசுப் பெட்டகச் சின்னம் பொதுத் தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெறப்போகிறது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்டதால் என்னைத் தாக்கிப் பேச வேண்டிய அவசியம் துரோகிகளுக்கு ஏற்பட்டுள்ளதால்தான் என்னைத் தாக்கி தற்போது பேசுகிறார்கள். 

"வாக்குக்குப் பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை இல்லை. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள்.

“எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதம் என்பது கூடாது. அது ஓர் அழிவு சக்தி. அதிலெல்லாம் போய் மதத்தின் பெயரையெல்லாம் சேர்த்து யார் பேசினாலும் அது தவறு. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு.

“தனிப்பட்ட ஒருவரோ, ஒரு குழுவோ தீவிரவாதிகளாக ஆவதால் அவர்கள் சார்ந்த மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் என்ன தொடர்பு. எல்லா மதங்களும் அன்பைத்தான் கற்பிக்கின்றன. எந்த மதமும் நீங்கள் தீவிரவாதி ஆகுங்கள், வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை அழியுங்கள் என்று சொல்வதில்லை. 

"இன்­னொரு மதத்தைத் தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தேவையின்றி மதத்தைத் தொடர்புபடுத்திப் பேசுவதை அனைவரும் தவிர்ப்பது நாட்டுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது,” என்று கேட்டுக் கொண்டார் தினகரன்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon