மோடிக்கு மட்டுமின்றி ராகுலுக்கும் ரஜினி ஆதரவு

சென்னை: மத்திய அரசாங்கத்தில் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராகப் பதவி வகிக்க உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள செல்வதாகக் கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.    

சென்னை போயஸ் தோட்ட  இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறுகையில், “இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மோடி ஆதரவு அலை வீசி வரு கிறது. தமிழகத்தில் மட்டும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது.

“ஒருமுறை அரசியலில் அலை வந்துவிட்டால் அந்த அலையை எதிர்த்து யாராலும் நீந்தமுடியாது. அந்த அலையோடு செல்பவர்கள் தான் வெற்றி பெறமுடியும்.

“தமிழகத்தில் பாஜக தோல் விக்கு நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், எதிர்க் கட்சியின் சூறாவளி பிரசாரம் உள்ளிட்டவையும் ஒரு காரணம்.

“மத்தியில் அமையும் பாஜக ஆட்சி தமிழகத்துக்கு நல்ல திட் டங்களை முன்வைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கோதாவரி, காவிரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பைக் கொண்டு வருவோம் என்று கூறியது பாராட் டுக்குரியது.

“மத்திய அரசு முதலில் தண்ணீர்ப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.

“ராகுல் காந்திக்கு நல்ல தலை மைப் பண்பு உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு பழமையான கட்சி, மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். இவ்வாறு உள்ள மூத்த தலை வர்களை ஒரு இளைஞர் கையாள் வது மிகவும் கடினம். 

“எனது பார்வையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் இந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை, கடினமாக உழைக்கவில்லை என்றே கூறுவேன். 

“ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை விட்டு விலகக் கூடாது. தன்னால் செய்யமுடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டவேண் டும். ஜனநாயக ஆட்சியில் ஆளும் கட்சியும் முக்கியம். அதே வேளை யில் எதிர்க்கட்சியும் முக்கியம் தான். எதிர்க்கட்சியும் பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டும். தற்போது ஆளும் கட்சி பலமாக உள்ளது,” என்றார் ரஜினி. 

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மை தான் என்று அவர் கூறினார்.