சுவையோடு ஆரோக்கியம் தரும் சுண்டைக்காய்

சுண்டக்காய் (ஆங்கிலம்: turkey berry) என்ற பெயரைக் கேட்டவுடன் சிலருக்கு கசப்புச் சுவை நாவில் தோன்றலாம். செடியிலிருந்து பறித்த பச்சைக் காய் அல்லது காயவைத்த சுண்டைக்காய் வற்றல் ஆகியவற்றில் கசப்புச் சுவை இருக்கலாம். ஆனால், அவற்றை புளிப்பு, காரம், உப்பு போன்ற சுவைகளுடனும் மசாலாக்களுடனும் சேர்த்துச் சமைக்கும்போது, அதன் கசப்புச் சுவையின் சுவடே தெரியாத அளவுக்கு மாறுவதோடு குழம்பு, வதக்கல் போன்றவற்றின் சுவை அருமையாக இருக்கும்.

பச்சை வண்ணத்தில் இருக்கும் சுண்டைக்காயில் வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’ சத்துகள் அதிகம் உள்ளன. அதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் மிகுந்து உள்ளன.

சுண்டைக்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மூலம் காரணமாக ஏற்படுகிற வலி, கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய். 

காய்ச்சல் இருக்கும்போது சுண்டைக்காயைச் சேர்த்துக் கொண்டால் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உண்டாகிற காயங்களையும் புண்களையும் ஆற்றுகின்ற குணமும் சுண்டைக் காய்க்கு உண்டு.  ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சுச் சளி, போன்ற தொந்தரவுகள் இருக்கிறவர்களுக்கு சுண்டைக்காய் அருமருந்து. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும். 
வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய்களைக் கொண்டு காரக்குழம்பு, புளிக்குழம்பு செய்வது போலவே சுண்டைக்காயிலும் குழம்பு செய்யலாம். விருப்பப்பட்டால் குழம்பை இறக்குவதற்கு முன்பு அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குழம்பின் சுவை மேம்படும். சுண்டைக்காய் வற்றலிலும் குழம்பு சமைக்கலாம்.