சுதாஸகி ராமன்
'சைமா' எனும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது நிகழ்ச்சிக்காக நடிகை நயன்தாரா சிங்கப்பூருக்கு வருவாரா? நிகழ்ச்சிக்கு நடிகை ஹன்சிகா எந்த ஆடையில் வந்தார்? பாகுபலி படத்தில் நடித்து பிரபலமடைந்துள்ள ராணா டக்குபாதி நிகழ்ச்சியைப் படைத்தாரா? இதுபோன்ற கேள்விகள் பல ரசிகர்களிடையே எழுந்தவண்ணம் இருந்தன. இரண்டு நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற 'சைமா' விருது நிகழ்ச்சிக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் வரத் தவறினாலும் நிகழ்ச்சிக்கு வந் திருந்த நட்சத்திரங்கள், அவர்கள் உடுத்தியிருந்த உடைகள், சிவப்புக் கம்பள நிகழ்வுகள் ஆகியவற்றைக் காண இயல வில்லையே என வருந்திய இணையவாசிகளுக்கு விருந்தாக அமைந்தன தமிழ் முரசின் சமூகத் தளங்களில் பதிவேற்றப்பட்ட படங்கள், காணொளிகள்.
ஐந்தாவது முறையாக மேடையேறிய 'சைமா' நிகழ்ச்சி, சன்டெக் சிட்டி மாநாடு மண்டபத்தில் கடந்த ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகின் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்கு வந்த நட்சத்திரங்கள் என்ன செய்தார்கள், எங்கே சென்றார்கள் என்பன போன்ற தகவல்களை உடனடியாக படங்கள், காணொளிகள் ஆகியவற்றின் மூலம் தமிழ் முரசு தன் இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டது.
'ஃபேஸ்புக்', 'டுவிட்டர்' என்று சமூக ஊடங்களின் மூலம் செய்திகளைத் தற்போது தன் வாசகர்களுக்குத் தெரிவித்து வருகிறது தமிழ் முரசு. செய்திகளுக்கு இணையத்தை நம்பி இருக்கும் இக்கால இளையர்கள், இணையவாசிகள் போன்றோரை ஈர்ப்பதற்காக இம்முயற்சி எடுக்கப் பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழ் முரசின் செய்தியாளர் குழுவால் இயக்கப்படும் இந்தத் தளங்கள், 'சைமா' விருதுகள் தொடங்கும் முன்னரே களைகட்ட ஆரம்பித்து விட்டன. 'சைமா'விற்கான சமூக ஊடகப் பதிவுகளைத் தொடங்கியதிலிருந்து அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
'சைமா'வை அறிவிக்க இங்கு மே மாதம் வந்திருந்த ஷ்ருதி ஹாசன், அனிருத், ராணா டக்குபாதி ஆகியோர் அளித்த பிரத்தியேக பேட்டி, விளம்பரக் காணொளிகள் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து தமிழ் முரசு தன் இணைய வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. நயன்தாரா, நித்யா மேனன் போன்ற நடிகைகள் கார்களி லிருந்து இறங்கி சிவப்புக் கம்பளத்தில் அன்னநடை போட்டு அங்கிருந்த ரசிகர் கூட்டத்தை மகிழ்வித்த ஒளிப்பதிவு 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஐந்து நாட்களில் சுமார் 40,000 முறை பார்க்கப்பட்டு ஏறத்தாழ 1,000 பேரால் 'லைக்' செய்யப்பட்டது. சிங்கப்பூர் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர் களிடையேயும் இந்தக் காணொளி கள் வரவேற்பைப் பெற்றன.
காணொளிகள் பதிவேற்றப்பட்டதும் உடனுக்குடன் 'ஃபேஸ்புக்' இணைய வாசகர்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இணைய வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இணையம் வழியாகப் போட்டிகளை தமிழ் முரசு நடத்தியது. 'ஃபேஸ்புக்' வழியாக தமிழ் முரசிடம் நுழைவுச் சீட்டுகளை வென்ற கிரேஷியஸ் ஸ்டீவன் தமிழ் முரசின் சமூகத் தளப் பதிவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். "சைமாவுக்கு நயன்தாரா வருவாரா என்ற கேள்வி பலரது மனங்களில் தோன்றியது. ஆனால், சாங்கி விமான நிலையத்தில் நயன்தாரா வந்திறங்கிய காணொளியை தமிழ் முரசு பதிவேற்றம் செய்த பிறகுதான் ரசிகர்கள் பலர் நம்பினர்," என்று கூறிய தமிழ் முரசின் துணை செய்தி ஆசிரியர் தமிழவேல், சமூக ஊடங்களில் வலம் வரும் இக்காணொளிகளின் தாக்கம் உற்சாகமளிக்கிறது என்றார்.
'சைமா' நிகழ்ச்சி தொடங்குவதற்கு முதல் நாள் நட்சத்திரங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற தமிழ் முரசு குழு, பொதுவாக ரசிகர்களின் பார்வைக்கு எட்டாத ஒத்திகைக் காட்சிகளை பதிவு செய்து அவற்றை இணைய வாசகர் களுடன் பகிர்ந்துகொண்டது. பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் முதலியவற்றை சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பதி வேற்றம் செய்ததன் மூலம் நட்சத்திரங்களுக்கு அருகே இணைய வாசகர்களைக் கொண்டு சென்றது தமிழ் முரசு. "சைமா விருதுகளை ஒட்டி வழங்கப்பட்ட விரிவான செய்திகளின் மூலம் சுமார் 1,000 அதிக 'ஃபேஸ்புக்' வாசகர்களை தமிழ் முரசு கவர்ந்திருக்கிறது. தமிழ் முரசில் வெளியிடப்படும் செய்திகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது," என்றார் தமிழ் முரசின் 'சைமா' செய்திக் குழுவை வழிநடத்திய தமிழவேல்.
சைமா நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளையர் பலர் தங்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரங்களுடன் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டதுடன் சிலர் கைகுலுக்கி ஆட்டோகிராஃபும் பெற்றுக்கொண்டனர்.
புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ஆனந்தமும் அடைந்தனர். படம்: திமத்தி டேவிட்