கணக்கைக் கொண்டாடும் கலைவிழா

இசையில் தாளம், நடனத்தில் அசைவு, நடிப்பில் சமயோசிதம் என்று நேரத்தைச் சரியாகக் கணித்து செயல்படுவதிலேயே கலைப் படைப்புகள் உயிர்பெறுகின்றன.

இந்தக் கணக்கின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கலைகள் மையம் ‘எ கேம் ஒஃப் நம்பர்ஸ்’ என்ற கலை விழாவை ஏற்பாடு செய்துள்ளது. 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கணக்கியல் துறையின் 90வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த விழா, இம்மாதம் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் நடனம், இசை, என 22 நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
      
நடனம் 

நாட்டியத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக  இடம்பெறுகிறது ‘28’ என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.  இந்த நடனத்தை வடிவமைத்து இருப்பவர் மூத்த நடனக் கலைஞரான திருமதி சாந்தா பாஸ்கர்.

“பரதநாட்டியத்தின் அடிப்படை ‘ஜதி’ எனப்படும் சொற்கட்டு. இதில் முக்கியமானவை ஐந்து. இந்த ஐந்து ஜதிகளைக் கூட்டும்போது 28 என்ற எண் விளைகிறது. ஆகையால் அந்த எண் முக்கியமானது எனக் கருதப்படுகிறது,” என்றார் பாஸ்கர் கலைக் கழகத்தின் கலை இயக்குநரான திருமதி சாந்தா பாஸ்கர், 79. 

இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு புல்லாங்குழல் கலைஞர்  கானவினோதன் உட்பட அனுபவமிக்க ஆறு இசைக் கலைஞர்கள் இசை வழங்குகின்றனர்.

கலைஞர்ரகளின் முகபாவங்களை நுணுக்கமாகப் பார்த்து ரசிக்க ஏதுவாக பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பும் உண்டு. 

மூன்று மாத கால தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த நாட்டிய நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் பங்குபெறுவதற்கு வாய்ப்புண்டு.

நிகழ்ச்சியில் ‘28’ நடனத்தின் கணக்குத் தத்துவங்களை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விக்டர் டான் விவரிப்பார் என்றும் தெரிவித்தார் திருமதி சாந்தா.

மேல் விவரங்கள்: http://www.nus.edu.sg/cfa/NAF_2019/event-28.html
 
இசை 

நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகளைப் படைத்து வரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இந்திய இசைக் குழு இந்தக் கலை விழாவின் இணை நிகழ்ச்சியாக ஒரு மாறுபட்ட இசைப் படைப்பை வழங்கவுள்ளது.

‘பவுண்ட்லஸ்’ எனும் இந்த இசை நிகழ்ச்சி எஸ்பிளனேட் அரங்கில் நடைபெறும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களையும் முன்னாள் மாணவர்களையும் உள்ளடக்கிய இந்தக் குழுவினரின் நிகழ்ச்சி, இம்மாதம் 17ஆம் தேதி இரவு 7.30க்கு நடைபெறும்.

ஆறு பாரம்பரிய இந்திய  இசைகளை கொண்ட இந்த நிகழ்ச்சியில், பாடல்களுடன் வீணை, வயலின், கீபோர்ட், சித்தார், சரோட், மிருதங்கம், கடம் ஆகிய பக்கவாத்திய இசைகளும் காதுக்கு விருந்தளிக்கும்.

சித்தார் கலைஞர் சுசான்தா வயலின் கலைஞர் லாஸார் கர்நாட இசைக் கலைஞர் ஜிபி அம்பிலி ஆகியோருடன் தேசிய பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும் ‘கீபோர்ட்’ இசைக் கலைஞருமான  அருண்குமாரும் ஓர் இசைக்கூற்றை இயக்கி உள்ளார். பல்கலைக்கழக மாணவரும் இசைக் குழுவின் தலைவருமான அமிதேஷ் சிவராமனும் முன்னாள் மாணவரான திரு வெங்கடேஷ் ஸ்ரீதரும் இணைந்து மற்றுமொரு இசைப் படைப்பை இயக்கியுள்ளனர்.

காலஞ்சென்ற வயலின் வித்வான் லால்குடி ஜெயராமனின் மாணவர் விஜயகுமாரின் இசை அமைப்பு ஒன்றும் நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். 

“இந்த இசை நிகழ்ச்சி மூலம் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை இசையின் மூலம் படம் பிடித்துக்காட்ட விரும்புகிறோம்,” என்றார் வயலினைச் கலைஞரான அமிதேஷ், 19. 

“வழக்கமாக இடம்பெறும் ராகங்கள், தாள அமைப்புகளுடன், அரிதாக வாசிக்கப்படும் சில கடின இசை அமைப்புகளையும் வாசிக்க உள்ளோம்.

“எல்லைகளைத் தாண்டி புதியனவற்றைக் கண்டறியும் எங்கள் முயற்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி  இடம்பெறுகிறது,” என்றார் அவர்.  

மேல் விவரங்கள்: http://www.nus.edu.sg/cfa/NAF_2019/event-boundless.html

நாடகம்

உலகப் புகழ்பெற்ற இந்திய கணித மேதை சீ.ராமானுஜன் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தின் பல முக்கிய உண் மைகளைக் கண்டறிந்தவர். கிட்டத்தட்ட 3,000 புதிய கணித முறைகளை அவர் கண்டுபிடித்தார். அந்த மேதையின் மகத்துவத்தைப் போற்றும் விதமாக ‘எ டிசப்பியரிங் நம்பர்’ என்ற நாடகம் இந்த விழாவின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது.

இம்மாதம் 15ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கலாசார நிலையக் கூடத்தில் இரவு 8 மணிக்கு இந்த நாடகம் அரங்கேறும்.

இந்த நிகழ்ச்சியின் இயக்குநரான ஏடித் பொடேஸ்டா, 39, “ராமானுஜரின் பெருமைகளை எடுத்துக்கூறுவதோடு இந்தியர் கள் கணக்குத் துறைக்கு வழங்கிய பங்களிப்புகளும் இந்தப் படைப்பில் வெளிப்படுத்தப்படும்,” என்றார். 

“உதாரணமாக ‘0’ஐ உருவாக்கியவர்கள் இந்தியர்கள். அது குறித்து நாடகத்தில் இடம்பெறும்,” என்ற ஏடித், இந்த நாடகம் முதல்முறையாக சிங்கப்பூரில் அரங்கேற்றப்படுகிறது  என்றும் குறிப்பிட்டார். 

இந்த நாடகத்தில் பிரபல இயற்பியலாளரான அனிந்தா ரௌ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திரு ரமேஷ் பணிக்கர், 58. கிட்டத்தட்ட 25 ஆண்டு களாக நாடகத் துறையில் ஈடுபட்டு வரும் அவர் தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.  

“நான் படித்த பல்கலைக் கழக கலை நிகழ்ச்சியில் ஈடுபடுவது அழகிய அனு பவம்,” என்று நினைவுகூர்ந்தார் திரு ரமேஷ்.  

“நவீன கணக்கியலின்  தொன்மையை ஆராய்ந்தால், அதில் பல அடிப்படைக் கண்டு பிடிப்புகள் நமது இந்திய வேதங் களில் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு இந்திய வரலாற்றையும் பராம்பரியத் தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த படைப்பு அமையும்,” என்றார் திரு ரமேஷ். 

மேல் விவரங்கள்: http://www.nus.edu.sg/cfa/NAF_2019/event-disappearing-number.html

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்

09 Dec 2019

குண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்

நிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்

09 Dec 2019

பார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி