கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி யின் உயர்நிலை மூன்றில் பயிலும் ஷான் ஆனந்தன், 15, திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிப் பாடங்கள், ஓட்டப்பந்தயப் பயிற்சி கள் என ஒரு கட்டுப்பாடான அட்டவணையைக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பின்பற்றி வரு கிறார். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பும் இவர், ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் சிங்கப்பூர் விளை யாட்டுப் பள்ளிக்குத் திரும்பிவிட வேண்டும். 
ஜூரோங் வெஸ்ட் தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே ஷான் ஆண்டுதோறும் நடக்கும் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தார். அவரது திறமையைப் பார்த்து அசந்துபோன பள்ளி ஆசிரியர்கள், காற்பந்தாட்டத்திற்குப் பதிலாக ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட ஷானை ஊக்குவித்தனர். 100, 200 மீட்டர் போட்டிகளில் தமது பள்ளியைப் பிரதிநிதித்து தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் பங்கேற்றுப் பெருமை சேர்த்தார் ஷான். தொடக்கப்பள்ளி இறுதி தேர்வுக் குப் பிறகு, ஷான் விளையாட்டுத் துறையில் மிளிர சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளிதான் சரியான இடம் என முடிவு செய்தனர் அவரின் பெற்றோர். 
விளையாட்டுப் பள்ளியில் சேர் வதற்கு நடத்தப்பட்ட சோதனைப் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்தார் ஷான். 
100, 200 மீட்டர் ஓட்டப் பந் தயங்களில் பங்கேற்று வந்த ஷான் 800 மீட்டர், 1,500 மீட்டர் நெடுங்தொலைவு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி யானவர் என அவரின் பயிற்றுவிப் பாளர்கள் கருதினர். அதற்குத் தகுந்தவாறு பயிற்சி அளிக்கத் தொடங்கினர். அவர்களின் கணக்கு சரியாக இருந்தது. 
கடந்த ஆண்டு நடந்த தேசிய அளவிலான பள்ளி திடல்தட போட்டிகளில் இவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் 1,500 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். மலேசியா, தாய் லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் ஷான் பங்குபெற, இவரின் ஆற்றல் பன்மடங்கு மேம்பட்டது. 
இவரின் வளர்ச்சிக்கு ஆதர வாக கடந்த மாதம் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் 15வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத் தில் இவருக்கு எட்மண்ட் வில்லியம் பார்க்கர் உபகாரச் சம் பள விருது வழங்கப்பட்டது. சிறந்த நடத்தையுடன், விளை யாட்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல்மிக்க மாண வர்கள் இந்த உபகாரச் சம்பளத் திற்குத் தகுதிபெறுவர். தெமாசெக் அறநிறுவனம் ஒன்றின் ஆதரவில் வழங்கப்படும் இவ்விருது, ஈராண் டுக்கு மாணவர்களின் அனைத்து பள்ளிக் கட்டணங்களையும் ஏற்றுக்கொள்ளும். 
“இ.டபிள்யூ.பார்க்கர் சிறந்த விளையாட்டு வீரராகத் திகழ்ந் தவர். அவரது விளையாட்டுப் பயணம் எனக்கு உற்சாகம் அளிக் கிறது. அவரது பாதையை நான் பின்பற்ற விரும்புகிறேன்,” என விருது பெற்ற ஷான் தெரிவித்தார். 
விளையாட்டுத் துறையின் சாதனைப் படிக்கட்டில் தொடர்ந்து ஏறுவார் என்பதற்கு அச்சாரமாக இம்மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த இளையர் களுக்கான மேற்கு ஆஸ்திரேலிய மாநில திடல்தடப் போட்டிகளில் தன் திறனைக் காட்டினார் ஷான். 800 மீட்டர் பிரிவு ஓட்டப்பந்தயப் போட்டியில் மூன்றாம் நிலையில் வந்தார். 2 நிமிடம், 5.8 வினாடிகளில் போட்டியை முடித்து தனது முந்தைய சாதனை நேரத்தை அவர் முறியடித்தது குறிப்பிடத்தக் கது. 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்திருக்கும் கென்ய ஓட்ட வீரர் டேவிட் ருடிஷா இவருக்கு முன்னுதாரணம். கடின உழைப்பின்றி உச்சத்தை எட்ட முடியாது என்பதை டேவிட் ருடி‌ஷாவின் சாதனை உணர்த்து வதாக ‌‌ஷான் குறிப்பிட்டார். 
இன்னும் ஆறு ஆண்டுகளில் தென்கிழக்காசிய போட்டிகளில் சிங்கப்பூரை பிரதிநிதிக்க வேண் டும் என்பதில் ஷான் குறியாக உள்ளார். எப்போதும் கடும்பயிற்சி யில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் விளையாட்டு வீரர் ஷான். 
யூ.கே. ‌ஷியாம் போன்று மற்றொரு சிங்கப்பூர் இந்திய திடல் திட வீரர் உருவாகும் தருணம் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

17 Jun 2019

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்  கல்லூரி படைத்த நாட்டிய விழா

சிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி

17 Jun 2019

சமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு