கண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை

இதுவரையில் வீடமைப்புப் பேட்டைகளில் முதியோருக்கு நடத்தப்பட்ட சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏதாவது ஒரு கண் பிரச்சினை இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறினார் சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவர் டாக்டர் ஜெயந்த் வெங்கட்ரமணி ஐயர்.

அவர்கள் அடுத்த கட்டமாக கண் நிபுணரைக் காண பரிந்துரைக்கப்படுகின்றனர் என்பதையும் டாக்டர் ஜெயந்த் விவரித்தார். பொதுவாக முதியவர்களுக்கு நீர்வறண்ட கண்கள் (dry eyes) வருவது வழக்கம்.

ஆனால் அது கண் பார்வையைக் கவலைக்குரிய வகையில் பாதிக்காதென்றும் கண் சொட்டுகள் (eye drops) பயன்படுத்துவது போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அல்லது சிறிய துண்டை வெந்நீரில் நனைத்து, கண்ணை மூடி, அப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் இதற்கு உதவும்.

அவ்வப்போது ஒரு கண்ணை கையால் மறைத்து, மற்றொரு கண்ணால் பார்க்க முடிகின்றதா என்பதை சோதித்துப் பார்ப்பது நல்லது என்று சொன்ன டாக்டர் ஜெயந்த், இது எந்த கண் மங்கலாகத் தெரிகின்றது என்பதையும் அந்த நபருக்கு எடுத்துக்காட்டும் என்றார்.

ஆரோக்கியமான கண்களுக்கு சமச்சீர் (balanced) உணவு முறையைக் கையாள்வது உகந்தது என்றும் டாக்டர் ஜெயந்த் தெரிவித்தார்.

கண் பார்வையைப் பாதிக்கக்கூடிய கண்புரை (cataracts), கண் அழுத்த நோய் (glaucoma), வயது தொடர்பான விழித்திரைச் சிதைவு (age-related macular degeneration), நீரிழிவு நோய் தொடர்பான விழித்திரை பிரச்சினை (diabetic retinopathy) ஆகியவற்றை முன்கூட்டியே அடையாளம் காணாத பட்சத்தில், பாதிக்கப்பட்ட கண் பார்வையைச் சீராக்குவது மிகக் கடினமாகும்.

உதாரணத்திற்கு, கண் அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோய் தொடர்பான விழித்திரை பிரச்சினைகள் கொண்டவர்களின் பாதிக்கப்பட்ட பார்வையைச் சீராக்க இயலாது. ஆனால் தகுந்த சிகிச்சையின் வழி பிரச்சினை மேலும் மோசமாகாமல் கட்டுப்படுத்தலாம்.

ஆரம்பக் கட்டத்தில் உதவி நாடினால் கண்புரை பிரச்சினைக்கு அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணவும் முடியும்.

அப்படி தொடக்கத்திலேயே இந்த கண் பிரச்சினைகளை அடையாளம் கண்டால், அதற்காக சிகிச்சை பெற்று பலன் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளதென்றார் டாக்டர் ஜெயந்த்.

அண்மையில் வெளியிடப்பட்ட அரசாங்க சுகாதார ஆய்வொன்றில், இந்த கண் பிரச்சினைகள் கொண்டவர்களில் ஏறக்குறைய நான்கில் மூவருக்கு தமக்கு அந்த பிரச்சினைகள் இருப்பதே அறியாமல் இருந்ததாகவும் கண் செயல்பாட்டுப் பரிசோதனைகளுக்குச் சென்ற பிறகே அதை பற்றி அறிய வந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீவு முழுவதும் பெரும்பாலும் அக்கம்பக்க சமூக மன்றங்களில் சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைகள் முதியவர்களுக்காக நடத்தப்படுவது வழக்கம்.

இதில் கண்கள், காதுகள், பல் ஆரோக்கியம் தொடர்பான அடிப்படை சோதனைகள் சுகாதார ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்படி கண் பார்வையில் பிரச்சினை ஏதேனும் கண்டறிப்பட்டால், சற்று மலிவான விலையில் கண்ணாடி வாங்குவதற்கான இடங்களுக்கு முதியோர் பரிந்துரைக்கப்படுகின்றனர் அல்லது மேற்கொண்ட இரண்டாம் கட்ட சோதனைகளுக்குத் தீவு முழுவதுமுள்ள அரசாங்க கண் நிலையங்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இரண்டாம் கட்ட சோதனையில் முதியவர்கள் ஒரு பார்வைத்திறன் சோதனைத் தொழில்நுட்பரைச் சந்திக்கின்றனர்.

கண்களை அவர் தீர சோதித்து கண்புரை, கண் அழுத்த நோய் (glaucoma) இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிவார்.

சோதித்த பிறகு, அடையாளம் கண்ட கண் பிரச்சினைக்கு ஏற்ற கண் மருத்துவரை அவர் பரிந்துரைப்பார்.

தமது அனுபவத்தில், தாம் சந்திக்கும் இந்திய நோயாளிகளில் கண்புரை பிரச்சினை அல்லது நீரிழிவு நோய் தொடர்பான விழித்திரை பிரச்சினை சற்று அதிகமாக இருப்பதாக டாக்டர் ஜெயந்த் தெரிவித்தார்.

ஆண்டிற்கு ஒரு முறையாவது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார் டாக்டர் ஜெயந்த்.

ஒருவர் முதுமை அடைய, கண், செவிப்புலன், பல் ஆரோக்கியம் தொடர்பான செயலாற்றல் சரிவை எதிர்நோக்கலாம்.

இதற்கிடையே முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெள்ளித் திரைத் திட்டம் (Project Silver Screen) எனும் தேசிய அளவிலான சமூக சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனை திட்டம் தற்போது நடப்பில் உள்ளது.

முதியவர்கள் கண்பார்வை, செவிப்புலன், பல் ஆரோக்கியம் தொடர்பில் பரிசோதனை செய்து கொள்ள திட்டம் வழிவகுக்கின்றது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இந்த வெள்ளித் திரை திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். முன்னோடித் தலைமுறைத்திட்ட அட்டை வைத்திருப்போருக்கு இந்த பரிசோதனைகள் இலவசம். ‘மெர்டேக்கா’ தலைமுறைத் திட்ட அட்டை வைத்திருப்போருக்கு கட்டணம் $2. ‘சாஸ்’ அட்டை வைத்திருப்போரும் குறைந்த கட்டணத்தில் இந்த பரிசோதனையில் ஈடுபடலாம்.

பரிசோதனை செய்துகொள்ளுங்கள்

தாமதிக்காமல் நீங்கள் வசிக்கும் வீடமைப்புப் பேட்டையில் நடத்தப்படும் சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனையில் பங்குகொள்ளுங்கள்.

www.projectsilverscreen.sg எனும் இணையத் தளம் மூலமாகவோ அல்லது 1800 650 6060 எனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தொலைபேசி எண் (AIC Hotline) மூலமாகவோ மேல் விவரம் பெறலாம்.

வார நாட்களில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் மேல்வரும் எண்ணை தொடர்புகொள்ளலாம்.

சனிக்கிழமையில் இச்சேவை மாலை 4 மணி வரையில் இயங்கும், பொது விடுமுறைகளில் தொலைபேசி சேவை இயங்காது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!