பகிர்ந்து உண்டு ஆரோக்கியத்தைப் பேணுவோம்

பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும், வீட்டு வேலை செய்ய வேண்டும், பிறருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கு கூச்சமாக இருக்கிறது என உடற்பயிற்சி செய்யத் தயங்கும் முதியவர்கள் கூற கேட்டிருக்கிறோம்.


76 வயது திருவாட்டி ரோக்கியா பிந்தி அப்துல்லாவும் 70 வயது திருமதி ஹாஜா அஸ்னா பிந்தி பஜரோன்னும் வீட்டில் பொறுப்புகள் இருந்தாலும் புதன்கிழமை வந்துவிட்டால் தவறாமல் தெம்புசு மூத்தோர் நடவடிக்கை நிலையத்திற்கு சென்றுவிடுவர்.
இவர்கள் ‘பகிர்ந்து உண்போம்’ (Share a Pot) என்ற திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
தேசிய சுகாதாரப் பராமரிப்பு குழுமம் முதியவர்களின் உடல் சத்து, உடலுறுதியை மேம்படுத்துவதோடு தனிமையில் அவர்கள் முடங்கிக்கிடக்காமல் இருக்க, இத்திட்டத்தை அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின்படி, தங்கள் வீட்டின் அருகில் உள்ள வெவ்வேறு நிலையங்களில் முதியோர் கூட்டாக சேர்ந்து தங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்து பின்னர் ‘சூப்’ அருந்துவர்.
தங்களது ஆரோக்கியத்திற்கு தாங்களே உரிமை எடுத்துக்கொள்ளும் விதத்தில் எவ்வளவு தொலைவு நடக்கிறார்கள் போன்ற விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதன்படி, அவர்களுக்கு வெகுமதி பற்றுச்சீட்டுகளும் கிடைக்கின்றது.
இத்திட்டம் தீவு முழுவதுமுள்ள 30க்கும் மேற்பட்ட நிலையங்களில் செயல்படுகிறது.
முதியவர்கள் சுயமாக செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘பகிர்ந்து உண்போம்’ திட்டத்தில் பங்குபெறுபவர்களுக்கு ‘சூப்’ தயாரிக்க, சில பங்கேற்பாளர்களே பொறுப்பு வகிக்கின்றனர்.


திருமதி ஹாஜா அவர்களில் ஒருவர். புதன்கிழமை காலையில் சக முதியவர்களுடன் பேரங்காடிக்குச் சென்று, ‘சூப்’ தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கியபின், தெம்புசு மூத்தோர் நடவடிக்கை நிலையத்தில் சமைக்க தொடங்கிவிடுவார்.
ஒவ்வொரு வாரமும், வெவ்வேறு விதமான ஆரோக்கியமான ‘சூப்’ தயாரிக்கப்படுகிறது.
இவர் சமைத்து முடித்ததும், கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் 1 மணி நேரம் மெல்லிய ‘ஏரோபிக்ஸ்’ பயிற்சியில் ஈடுபடுவார்.
இதனை சுகாதார மேம்பாட்டு வாரிய உடற்பயிற்சி பயிற்றுநர் கூட்டாக வழி நடத்துவார்.


பயிற்சி முடிந்ததும், பங்கேற்பாளர்கள் குழுக்களாக அமர்ந்து, ‘சூப்’ அருந்தியவாறு மற்ற பங்கேற்பாளர்களுடன் உரையாடி நட்புறவை வளர்த்துக்கொள்வர்.
‘‘பிறருக்கு சூப் தயாரித்து கொடுத்து அவர்கள் அதனை ரசித்து உண்ணும்போது ஒருவித திருப்தி கிடைக்கின்றது.
“வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், சோர்வு வந்துவிடும்,’’ என்று தெரிவித்தார் திருமதி ஹாஜா.


அவ்வப்போது புதிய ‘சூப்’ குறிப்புகளையும் தாம் பரிந்துரைப்பதாகக் கூறிய திருமதி ஹாஜா, உடற்பயிற்சியின் மூலம் தமது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு தம்மால் சற்று வேகமாக நடக்கவும் முடிகிறது என்றார்.
குடும்பத்தினர்களுக்கு சமைக்க வேண்டும், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் போன்ற பொறுப்புகள் தமக்கு இருந்தாலும் உடற்பயிற்சிக்கென நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று இவர் விரும்புகிறார்.
திட்டத்தில் பங்கெடுக்கும் அவரின் நண்பரான திருவாட்டி ரோக்கியா தமது பேரனுடன் யூனோஸ் வட்டாரத்தில் வசிக்கிறார்.


வீட்டில் நாள் முழுக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தவாறு பொழுதை கழிக்க விரும்பாத அவர், தமக்கு தெரிந்த நண்பர்களையும் ‘பகிர்ந்து உண்போம்’ போன்ற துடிப்பான மூப்படைதல் திட்டங்களில் சேர ஊக்குவித்து வருகிறார்.
‘‘எல்லாருடனும் கூட்டாக சேர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. தனியாக இருக்கும்போது, உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற உத்வேகம் வருவது கடினம்.
“விறுவிறுப்பு குறையாமல் இருக்க, உடற்பயிற்சி முறைகளில் மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளன,’’ எனக் கூறினார் திருவாட்டி ரோக்கியா.


உடல் வலி போன்ற காரணங்களால் முன்பு மருத்துவரை மாதத்தில் இரு முறையாவது சந்திக்க வேண்டியதாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர், உடற்பயிற்சியின் காரணமாக வலியின்றி நன்றாக உறங்க முடிகிறது என்றார்.
இதற்கு மேலாக, தெம்புசு மூத்தோர் நடவடிக்கை நிலையத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் நடத்தப்படும் யோகா வகுப்புகளிலும் அவர் கலந்துகொண்டு அதன் பலன்களை உணர்கிறார்.மூப்படையும் போது உடலை ஆரோக்கியமாக பேணும் அதே சமயம் மனநலத்தையும் பேணி காக்க வேண்டும் என்பது திருவாட்டி ரோக்கியாவின் கருத்து.

இதுபோன்ற துடிப்பான மூப்படைதல் திட்டங்களில் சேரும்போது நண்பர் வட்டம் விரிவடைகிறது என்று சொன்ன திருவாட்டி ரோக்கியா, தனியாக யார் துணையுமில்லாமல் முதியவர் ஒருவர் வீட்டில் முடங்கி கிடந்தால், மனச் சோர்வு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கக் கூடும் என்றார்.

இத்திட்டத்தின் வழி தங்களிடையே நட்புறவை வளர்த்துக்கொண்ட திருமதி ஹாஜாவும் திருமதி ரோக்கியாவும் தங்களுக்கிடையே அவரவர் பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர், ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் உள்ளனர்.
‘‘வெளியே செல்லுங்கள், முதியோருக்காக நடத்தப்படும் நடவடிக்கைகளில் பங்குபெறுங்கள். “ஏனெனில் வீட்டிலேயே இருந்தால், சிந்தனையோட்டம் நம்மை சோகத்திற்கு இட்டுச் செல்லும்,’’ என்று கூறினார் திருவாட்டி ரோக்கியா.

பகிர்ந்து உண்போம்

‘பகிர்ந்து உண்போம்’ திட்டத்தில் சேர, http://www.shareapot.sg/shareapot-sites எனும் இணையப் பக்கத்திற்கு செல்லலாம். இத்திட்டத்தைப் பற்றிய கேள்விகள் இருந்தால், shareapot@ktph.com.sg எனும் இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். கூ டெக் புவாட் மருத்துவமனையின் தொடர்பு எண்ணுக்கும் (6555-8000) தொடர்பு கொண்டு திட்டத்தில் சேரலாம்.
முதியோர் துடிப்பாகவும், ஆரோக்கியமாகவும் சமூகத்துடன் இணைந்திருக்க, தீவு முழுவதும் பலதரப்பட்ட துடிப்பான மூப்படைதல் திட்டங்கள் செயல்படுகின்றன. உடற்பயிற்சி நடவடிக்கைகள், மூத்தோர் சுகாதார பயிலரங்குகள், ஆரோக்கிய சமையல் வகுப்புகள் போன்றவற்றில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
www.bit.ly/age-actively அல்லது 1800-650-6060 எனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தொலைபேசி எண் (AIC hotline) வழியாகவோ இதன் தொடர்பில் விவரம் பெறலாம்.வார நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் 8.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நீங்கள் மேல்வரும் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பொது விடுமுறைகளில் தொலைபேசி சேவை இயங்காது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!