துடிப்பான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு அஸ்திவாரம்

மருந்தகம் ஒன்றில் முன்பு அலுவலக வேலை செய்த திருவாட்டி ச.சாந்தா, தமது முழு நேர வேலையிலிருந்து ஓய்வுபெற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இனி பொழுதை எப்படி கழிப்பது என்ற திண்டாட்டம் ஓய்வுபெற்றவர்கள் சிலரிடம் இருக்க, அதற்கு முறையாகத் திட்டமிட்டுவிட்டார் 67 வயது திருவாட்டி ச.சாந்தா.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பகுதி நேரமாக அலுவலக வேலை செய்துவிட்டு ஓய்வு நேரத்தில் தமக்குப் பிடித்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட இவர் முடிவெடுத்தார்.

சிறு வயதிலிருந்து ‘வாட்டர்கலர் பெயின்டிங்’ எனும் வண்ணம் தீட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதில் திருவாட்டி சாந்தாவிற்கு அதிக நாட்டம் இருந்தது.

குடும்ப பொறுப்பு, முழு நேர வேலை காரணத்தினால் முன்பு இவரால் இதில் ஈடுபட முடியவில்லை. ஆனால் ஓய்வுபெற்ற பிறகு இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது மனதில் இருந்தது.

இதன் தொடர்பில், தேசிய முதியோர் பயிற்சிக்கழகம் (National Silver Academy) முதியோருக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்குவதை ஓர் ஊடக விளம்பரத்தைப் பார்த்து இவர் தெரிந்துகொண்டார்.

துடிப்பான மூப்படைதலை ஊக்குவிக்கும் முதுமைக்கால மன்றம் (Council for Third Age) இந்த தேசிய முதியோர் பயிற்சிக்கழகத்தை நிர்வகிக்கிறது.

50 வயதை கடந்தவர்களுக்கு வேலைக்கும் பொழுதுபோக்கிற்கும் பலவித பயிற்சி வகுப்புகளின் விவரங்கள் பயிற்சிக்கழகத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதன்வழி, நன்யாங் நுண்கலைக் கழகத்தில் (NAFA) ‘வாட்டர்கலர் பெயின்டிங்’ நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் திருவாட்டி சாந்தா சேர்ந்தார்.

மாலை வேளைகளில் வாரத்தில் ஒருமுறை 2 மணி நேரம் வகுப்புகள் நடைபெற்றன. வகுப்பில் சராசரியாக 20 பேருக்கு பாடம் நடத்தப்படும்.

“ஆர்வம் இருந்ததால் வகுப்பறைக்கு மீண்டும் செல்வது குறித்து எவ்வித தயக்கமும் இல்லை. அப்படி ஒரு வேளை விருப்பமில்லாமல் இதில் ஈடுபட்டிருந்தால் என்னால் தாக்குப்பிடித்திருக்க முடியாது,’’ என்று கூறினார் திருவாட்டி சாந்தா.

நன்யாங் நுண்கலைக் கழகத்தையும் சேர்த்து, லாசால் (LASALLE) கலைக் கல்லூரியிலும் இவர் வரையும், வண்ணம் தீட்டும் வகுப்புகளில் சேர்ந்து தம் திறமைகளைப் படிப்படியாக மேம்படுத்தி வருகிறார்.

இதுபோன்ற வகுப்புகளில் சேர்ந்தபோது, புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதன்வழி, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஒரே மாதிரியான விருப்பம் கொண்ட நட்பு வட்டம் உருவாகிறது.

தீவு முழுவதும் ஏதாவது கலை தொடர்பான வகுப்பு அல்லது நிகழ்ச்சி நடைபெற்றால், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். இந்நடவடிக்கைகள்வழி அவர்கள் ஒன்றுகூடவும் செய்கின்றனர்.

புதிய திறன்பேசி ஒன்றை வாங்கியபோது அதன் அம்சங்களை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் திருவாட்டி சாந்தாவுக்கு இருந்தது.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்தாண்டு ‘ஆன்ட்ராய்ட் கைபேசியை எப்படி திறன்பட பயன்படுத்துவது?’ என்ற பயிலரங்கில் சேர்ந்து அதன் நுணுக்கங்களை இவர் கற்றுக்கொண்டார்.

இப்போது, கலை தொடர்பான வகுப்புகளுக்குச் செல்லும்போது திறன்பேசியைக் கொண்டு ஓவியங்களை இவர் புகைப்படம் எடுக்கிறார். இவரது கற்றலுக்கு இத்தகைய திறன்கள் பெரிதும் உதவுகின்றன.

கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த வாகன விபத்து ஒன்றில் திருவாட்டி சாந்தாவின் உடலின் வலது பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்டன. குணமாவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பிடித்தன, அதனால் சிறிது காலம் வகுப்புகளை இவர் ரத்து செய்ய வேண்டியதாக இருந்தது.

உடல்நலம் தேறியதுடன், மீண்டும் தமது துடிப்பான வாழ்க்கைமுறைக்குத் திரும்பினார் திருவாட்டி சாந்தா. தமது வீட்டுக்கு அருகில் நடத்தப்படும் ‘ஏரோபிக்ஸ்’ வகுப்புகளுக்கு இவர் செல்லத் தொடங்கினார்.

தாம் வசிக்கும் வட்டாரத்தில் நடத்தப்படும் ஒரு மணி நேர இலவச காலை உடற்பயிற்சி வகுப்புகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சின் ‘ஹெல்த் 365’ செயலி மூலம் இவர் தெரிந்து கொண்டார்.

அவற்றில் கலந்துகொண்டு தம் உடல் ஆரோக்கியத்தைப் பேணி வருகிறார் திருவாட்டி சாந்தா.

வீட்டில் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பதில்லை. மாறாக, நூல்களை வாசிப்பது இவரின் மற்றொரு பொழுதுபோக்கு.

தம் வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்திற்குச் சென்று நூல்களை இரவல் பெற்று அவற்றை வாசிப்பார்.

வெவ்வேறு நூலகங்களில் நடத்தப்படும் கலை வகுப்புகளிலும் இவர் பங்கேற்கிறார்.

தினசரி வாழ்க்கைமுறையில் பொழுதுபோக்கிற்காக போதிய நேரத்தை இவர் ஒதுக்குவதால் மனதளவில் ஒருவித திருப்தி கிடைப்பதாக திருவாட்டி சாந்தா கூறினார்.

ஞாபக மறதி நோய் கொண்ட தம் தாயாரை பராமரிப்பவர்களில் இவரும் ஒருவர்.

வீட்டில் தனியாக வசிக்கும் திருவாட்டி சாந்தா, தம் வட்டாரத்தில் சிறந்த நட்பு வட்டத்தை தாம் பெருக்கிக்கொண்டதாக கூறினார்.

எந்நேரமும் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இவரை இளமையாகவும் துடிப்பாகவும் இருக்கச் செய்கிறது.

அண்மையில், வீட்டிற்கு புதிய கணினி ஒன்றை வாங்கிய திருவாட்டி சாந்தா, அதனை சரியாகவும் தமக்கு உதவும் வகையிலும் பயன்படுத்திக்கொள்ள ஒரு சில பயிலரங்குகளுக்கு இம்மாதம் பதிவு செய்துள்ளார்.

‘‘துடிப்பான வாழ்க்கைமுறைக்கு, முதலில் வீட்டிற்கு வெளியே ஏதாவது தங்களுக்குப் பிடித்த நடவடிக்கையில் ஈடுபட முதியோர் முன்வர வேண்டும்.

வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பலதரப்பட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, ஓய்வுபெற்று விட்டோமே என்ற எண்ணம் வராது. தனிமையைப் போக்கலாம், மகிழ்ச்சியுடன் மூப்படையலாம்,’’ என்றார் துடிப்பான மூப்படைதலுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் திருவாட்டி சாந்தா.

புதிய திறனை இன்றே கற்றுக்கொள்ளுங்கள்!

திருவாட்டி சாந்தாவை போல உங்களுக்கும் புதிய திறனைக் குறைந்த விலையில் கற்றுக்கொள்ள ஆசையா? உடனே
www.nsa.org.sg எனும் தேசிய முதியோர் பயிற்சிக்கழகத்தின் இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள் அல்லது 6478 5029 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.

பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து, வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இத்தொலைபேசி சேவை இயங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!