அட்டவணை தயாரித்து வழிகாட்டிய ஆசிரியருக்கு நன்றி

3 mins read

இது தமிழர் பேரவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் நான் எனது வகுப்பாசிரியை திருமதி யோங் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து பேசிய பேச்சு.

தொடக்கநிலை 3ல் எனக்கு புதிய வகுப்பாசிரியையாக வந்தார் திருமதி யோங். நான் 'மினியன்', 'ஸ்பைடர்மேன்' போன்ற உருவங்களை நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆர்வத்துடன் வரைய ஆரம்பித்தேன்.

அதனால் வீட்டுப்பாடங்களைப் பிறகு செய்யலாம் என்று என் வகுப்பு மேசையின் இழுப்பறையில் வைக்கத் தொடங்கினேன்.

வீட்டில் அம்மாவிடம், "வீட்டுப்பாடங்களை வகுப்பிலேயே முடித்துவிட்டேன்," என்று பொய் சொல்லத் தொடங்கினேன்.

எனது வகுப்பு மேசையின் இழுப்பறை முடிக்காத வீட்டுப் பாடங்களால் நிரம்பி வழிந்தது. படிப்பில் இருந்த எனது கவனம் மெதுமெதுவாகச் சிதறத் தொடங்கியது.

வீட்டுப்பாடங்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கடந்து விட்டிருந்தது. வெள்ளம் தலைக்கு மேல் சென்றுவிட்டது. ஒன்றுமே செய்ய முடியாத இக்கட்டில் சிக்கித் தவித்தேன்.

என்னுடைய நடவடிக்கையைக் கண்காணித்த என் ஆசிரியை என் மேசையை சோதனையிட்டு, ஒப்படைக்காத வீட்டுப்பாடங்களைக் கண்டுபிடித்தார்.

அன்றும் வீட்டில் வழக்கம்போல அம்மா கேட்டதற்கு பள்ளியிலேயே பாடத்தை முடித்துவிட்டேன் அம்மா என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் தன் கைத்தொலைபேசியைக் காட்டினார். அதில் என்னுடைய வகுப்பறை மேசையும் என் வீட்டுப்பாடங்களும் படமாக என்னைப் பார்த்துச் சிரித்தன.

உண்மையைச் சொல்லும் நேரம் வந்தது. அழுதபடி நடந்த அனைத்தையும் கூறினேன். அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் தலையணை என் கண்ணீரால் ஈரமாகிக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள் ஆசிரியை ஒன்றுமே நடக்காததுபோல வகுப்பை நடத்தினார். என்னிடம் வழக்கம்போலவே கேள்விகள் கேட்டார். வகுப்பில் கோபத்துடன் என்னை எல்லார் முன்னிலையிலும் தண்டிப்பார் என்று பயந்த எனக்கு அவர் என்னை நடத்திய விதம் அதிர்ச்சியைத் தந்தது. வகுப்பு முடியும் நேரத்தில் "சர்வோ உன் உதவி தேவைப்படுகிறது. நீ மட்டும் நில்", என்று கூறி என்னை நிறுத்தினார்.

எனக்குப் பயத்தில் மயக்கம் வந்துவிடும்போல் இருந்தது. ஆசிரியையிடம் இருந்து கோபமான வார்த்தைகளை எதிர்பார்த்து தலைகுனிந்து நின்றிருந்தேன்.

"சர்வோ, உன்னிடம் திறமை இருக்கிறது. உன்னால் நல்ல ஒரு நிலைக்கு வர முடியும். ஆனால் நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். எது முக்கியமோ, அதை முதலில் செய்ய வேண்டும்," என்ற அவரின் கனிவான வார்த்தைகள் எனக்குக் கண்ணீரை வரவழைத்தன.

அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கையும் அக்கறையும் அவரின் வார்த்தைகளில் தெரிந்தன. அவர் சொன்ன ஒவ்வொன்றையும் கவனத்துடன் கேட்டேன்.

திருமதி யோங் எனக்காக ஒரு வழிகாட்டியைத் தயாரித்து இருந்தார். அதில் நான் செய்து முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்களும் நேர அட்டவணையும் நேர்த்தியாக அச்சிடப்பட்டிருந்தன.

என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை. 'எவ்வளவு நல்ல ஆசிரியை இவர்?' மிகுந்த நன்றியுணர்வோடு, அவர் சொற்படி நடப்பதாக உறுதியளித்தேன்.

அடுத்து வந்த வாரங்களில் ஒவ்வொன்றாக எனது வீட்டுப் பாடங்களை முடித்தேன். கடினமான பகுதிகளையெல்லாம் கிடைத்த நேரங்களில் ஆசிரியையிடம் கேட்டேன். அவரும் பொறுமையுடன் சொல்லித் தந்தார். அவரின் உதவியினால் நான் மீண்டும் பாடங்களில் நன்றாகச் செய்யத் தொடங்கினேன்.

இன்று நான் என் ஆசிரியை திருமதி யோங்கை மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

என்றார் திருவள்ளுவர். அன்று சரியான நேரத்தில் திருமதி யோங் நான் வழி தவறிப்போகாமல் செய்த உதவி என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.

பா. சர்வோதர்

தொடக்கநிலை 5

கான்கார்ட் தொடக்கப்பள்ளி