சுடச் சுடச் செய்திகள்

மக்கள் ஊரடங்கு நாளில் ஆம்புலன்ஸ் வரத் தாமதம்; மகளுக்கு பிரசவம் பார்த்த தந்தை

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (மார்ச் 22) அங்கு மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது.

மாநில அரசுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து கட்டுப்பாடுகளை விதித்தன. பேருந்து, ரயில் உட்பட போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலமடை சுள்ளியார் டேம் பகுதியை சேர்ந்த பிரகாசன் என்பவரின் மகள் தேவி, 27, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இம்மாதம் 29ஆம் தேதி குழந்தை பிறக்கும் என்று பாலக்காடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

 இந்நிலையில், நேற்று தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தந்தை, மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார்.

ஆனால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு வழியாக அவசரகால மருத்துவ வாகனத்தை வரவழைத்த தந்தை, மகளுடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.

நடுவழியிலேயே பிரசவ வலியில் துடித்தார் தேவி. இதனையடுத்து அவசர மருத்துவ சிகிச்சை வாகனம் நிறுத்தப்பட்டது.

அந்த இக்கட்டான நிலையில் தந்தையே மகளுக்கு பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை துண்டிக்காமல் அப்படியே தாயின் மார்பில் குழந்தையை அணைத்தவாறு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

"உடனடியாக வாகனம் கிடைக்காததால் மகளுக்கு நடுவழியிலேயே பிரசவம் ஆனது," என்று கூலித் தொழிலாளியான திரு பிரகாசன் குறிப்பிட்டார்.

#இந்தியா #கேரளா