சவூதி சிறையில் 20 ஆண்டுகள்: மரண தண்டனையிலிருந்து தப்பிய கேரள ஆடவர் தாயகம் திரும்பினார்

சவூதி சிறையில் 20 ஆண்டுகள்: மரண தண்டனையிலிருந்து தப்பிய கேரள ஆடவர் தாயகம் திரும்பினார்

2 mins read
abf8ee00-e252-42d2-8270-4defc93c4a71
20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு, அப்துல் ரஹீம் கேரளாவுக்குத் திரும்பி தமது குடும்பத்தினருடன் இணைந்தார். - படம்: சவூதி அரேபியாவிற்கான இந்தியத் தூதரகம்
Google News Preferred Icon

கோழிக்கோடு: சவூதி அரேபியாவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீம், பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அவர் வியாழக்கிழமையன்று (மே 28) பாதுகாப்பாக இந்தியா திரும்பினார்.

அப்துல் ரஹீம் கடந்த 2006ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு ஓட்டுநராகப் பணிபுரியச் சென்றார். அங்கு உடற்குறையுள்ள 15 வயது சிறுவன் ஒருவனைப் பராமரிக்கும் தனியார் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார்.

அந்தச் சிறுவன் தன் உடலோடு இணைக்கப்பட்டிருந்த வெளிப்புற மருத்துவக் கருவியின் மூலமே சுவாசித்து வந்தான். ஒருநாள் காரை ஓட்டிச் சென்றபோது அச்சிறுவன் அவருக்கு மரியாதை அளிக்காத வகையில் மோசமாக நடந்துகொண்டதாகவும் அவனைக் கட்டுப்படுத்த முயன்றபோது ரஹீமின் கை தவறுதலாக அந்தச் சாதனத்தின் மீது பட்டு அது துண்டிக்கப்பட்டதால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சவூதி நீதிமன்றம் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதித்து மரண தண்டனையை விதித்தது. இந்தத் தீர்ப்பை அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றமும் பின்னர் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இருப்பினும், தூதரக மற்றும் சட்ட ரீதியான பல ஆண்டுகாலத் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் இஸ்லாமிய சட்டத்தின்படி ‘தியா’ எனப்படும் ‘ரத்தப் பணம்’ பெறச் சம்மதித்தனர். அதன்படி 1.5 மில்லியன் சவூதி ரியால் (ஏறத்தாழ 34 கோடி இந்திய ரூபாய்) இழப்பீட்டுத் தொகையை 2024ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டு, அவர்கள் ரஹீமை மன்னித்தனர்.

இந்தப் பெரும் தொகையைத் திரட்டுவதற்காகச் சவூதியிலுள்ள இந்தியத் தூதரகமும் இந்தியச் சமூகத்தினரும் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் மக்கள் நிதி திரட்டு இயக்கத்தை நடத்தி முழுப் பணத்தையும் திரட்டினர்.

20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு, ரஹீம் கேரளாவுக்குத் திரும்பி தமது குடும்பத்தினருடன் இணைந்தார்.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாமரண தண்டனைகேரளா