ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 217 இந்தியர்களில் 49 பேர் உயிரிழப்பு

ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 217 இந்தியர்களில் 49 பேர் உயிரிழப்பு

2 mins read
45f47f8d-9cf2-49cd-8508-143bc50aa2f7
ரஷ்ய ராணுவச் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட 139 பேரை மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வர இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. - கோப்புப்படம்: பிடிசி நியூஸ்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் 217 இந்தியர்கள் இணைந்ததாகவும் அவர்களில் 49 பேர் உக்ரேன் போரில் உயிரிழந்துவிட்டதாகவும் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவச் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட 139 பேரை மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வர இந்தியத் தூதரகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் அறுவரைக் காணவில்லை என்று ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எஞ்சிய 23 பேரின் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை.

இந்தியச் சமூக நலநிதியின்கீழ் இதுவரை 48 பேருக்கு விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளியுறவு அமைச்சின் சார்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்விடம் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் காண 21 குடும்பங்களின் மரபணு அறிக்கைகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

நிலுவையிலுள்ள நான்கு இழப்பீட்டுக் கோரிக்கைகளில் ஒரு குடும்பத்திற்கும், தனியாக விண்ணப்பித்த மூன்று குடும்பங்களுக்கும் ரஷ்ய அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

தற்போது போர்க்களத்திலிருந்து இந்தியர்களின் உடல்களை மீட்பது சாத்தியமில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

சலுகைகளால் ஈர்ப்பு

தொடக்கத்திலேயே வழங்கப்படும் கிட்டத்தட்ட 5,000 அமெரிக்க டாலர் ஊக்கத்தொகை, 2,500 டாலர் மாதச் சம்பளம், ரஷ்யக் குடியுரிமை, சமூகப் பாதுகாப்பு, உயிரிழந்தால் ஏறத்தாழ 168,000 டாலர் இழப்பீடு போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்ததாகத் திருவாட்டி ஐஸ்வர்யா விளக்கினார்.

மேலும்,போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி ரஷ்யச் சிறையிலிருந்த கிஷோர் சரவணன், சாகில் மஜோதி ஆகிய இரு இந்திய மாணவர்கள் தங்களது சிறைத்தண்டனைக் குறைப்பிற்காக ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் தலையீட்டால் கிஷோர் விடுவிக்கப்பட்டாலும், அவர் ரஷ்யக் குடியுரிமை பெற்று அங்கேயே தங்கிவிட்டார். சாகில், உக்ரேன் படைகளிடம் சரணடைந்ததால், அவரை மீட்க உக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்