புதுடெல்லி: பறப்பதற்கான தகுதிச் சான்றிதழ் இல்லாமல் ஏர் இந்தியாவின் ஏ320 நியோ விமானம் ஒன்று இயக்கப்பட்டது குறித்து இந்தியாவின் பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது.
தகுதிச் சான்றிதழ் காலாவதியாகிவிட்ட பின்னரும் குறைந்தது எட்டுத் தடங்களில் அவ்விமானம் வானில் பறந்ததாகச் சொல்லப்படும் நிலையில், ஏர் இந்தியாவின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதனையடுத்து, தொடர்புடைய பணியாளர்கள் அனைவரும் விசாரணை முடியும்வரை வேலையில் தொடர முடியாதபடி, பனிமுறைப் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் நிறுவன உள்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏஆர்சி எனப்படும் பறப்பதற்கான தகுதி மறுஆய்வுச் சான்றிதழ் காலாவதியாகிவிட்ட நிலையில், 2025 நவம்பர் 24, 25 தேதிகளில் அந்த ஏ320 விமானம் எட்டு முறை இயக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தகுதிச் சான்றிதழ் காலாவதியாகிவிட்டதைப் பொறியாளர் ஒருவர் கவனித்ததும் ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாக அவ்விமானத்தை சேவையிலிருந்து நிறுத்தியது.
164 பேர் அமர்ந்து செல்லக்கூடிய அவ்விமானத்தை மேலும் இயக்காதபடி சேவையிலிருந்து நிறுத்திவைக்குமாறு டிஜிசிஏவும் அறிவுறுத்தியுள்ளது.
அவ்விமானம் முன்னைய விஸ்தாரா நிறுவனத்திற்குச் சொந்தமானது. பின்னர் அந்நிறுவனம், 2024 நவம்பரில் டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“இதுநாள்வரை, விதிமுறைகளுக்கு இணங்கியதால் 69 விமானங்களுக்கு ஏஆர்சி சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. 70வது விமானத்திற்கும் அச்சான்றிதழ் கேட்டு டிஜிசிஏயிடம் ஏர் இந்தியா விண்ணப்பம் செய்துள்ளது. பிறகு எந்திரத்தை மாற்றுவதற்காக அவ்விமானம் சேவையிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டது.
“இடைப்பட்ட காலத்தில் ஏஆர்சி சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. அப்படியிருந்தும், எந்திரத்தை மாற்றியபிறகு அவ்விமானம் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டது,” என்று டிஜிசிஏ செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

