அமராவதி: இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 55 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) ஒரே நாளில் ஆந்திராவில் 21 பேரும் தெலுங்கானாவில் 34 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
கடந்த மூன்று வாரங்களாக ஆந்திராவில் வெப்ப அலை வீசுகிறது. அங்கு 13 மாவட்டங்களில் 42 முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவானது.
கோடை வெயிலின் உக்கிரத்தால் ஆந்திராவில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த 21 பேரில் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த பத்துப் பேர் அடங்குவர்.
வெயிலின் சீற்றம் தெலுங்கானாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கரீம் நகர், அதிலாபாத், ரங்காரெட்டி, நல்கொண்டா, பெத்தபல்லி, ஜெய்சங்கர் பூபாலபல்லி, வாரங்கல், மகபூபாபாத், யாதாத்ரி புவனகிரி எனப் பரவலாக 34 பேர் உயிரிழந்துவிட்டனர். 15 மாவட்டங்களில் 46 டிகிரி வெயில் பதிவானது.
45 டிகிரி செல்சியஸ் வெப்பம்
இந்திய மக்களுக்கு கோடை வெயில், வெப்ப வாதம் ஆகியவை புதியவை அல்ல. ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் அந்நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வெப்ப அலை வீசுவது வழக்கம்தான்.
140 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் பல நகரங்களில், அண்மைக் காலமாக வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது.
பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்க மாநிலம் தழுவிய விழிப்புணர்வு தேவை என தெலுங்கானா வருவாய் அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதீத வெப்பம் நீரிழப்பை ஏற்படுத்தி ரத்தத்தை கெட்டியாக்குவதுடன், குறிப்பாக கடுமையான சூழல்களில், உறுப்புகள் செயலிழக்க நேரிடும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தெலுங்கானாவில் உள்ள உள்ளாட்சி அமைப்பு, முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
நண்பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியில் நடமாடுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக இருப்பதால் புழுக்கம் அதிகரித்து, தூக்கமின்றிப் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
இழப்பீடு அறிவித்த தெலுங்கானா அரசு
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனத் தெலுங்கானா அரசு அறிவித்தது.
இந்நிலையில், சனிக்கிழமை (மே 23) ஆந்திராவில் திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா ஆகிய பகுதிகளில் அதிகாலை தொடங்கி நண்பகல் வரை விட்டுவிட்டு பெய்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையே, சென்னையிலும் சனிக்கிழமையன்று வெயிலின் சீற்றம் குறைந்திருந்தது. காலை 8 மணிக்குத் திடீரென மாநகர் முழுவதும் பலத்த புழுதிக்காற்று வீசத் தொடங்கியது. அடுத்த இரண்டு மணிநேரத்துக்குள் காற்றின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டராக அதிகரித்தது.
மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சென்னைவாசிகள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தியாவின் அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 2016ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பலோடியில் பதிவானது.

