லக்னோ: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தில் தவறான தகவல்களை நிரப்பிய குடும்பத்தார்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாட்டிலேயே முதன்முறையாக ஒரு பெண் உள்ளிட்ட மூவர்மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அங்குள்ள ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நூர்ஜஹான். இவருக்கு ஆமீர்கான், டேனிஷ்கான் என இரு மகன்கள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் நீண்டகாலமாக துபாய், குவைத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்ஐஆர் படிவத்தை நூர்ஜஹான் அதிகாரிகளிடம் அளித்துள்ளார். அவரது இரு மகன்களும் தற்போது ஜூவாலா நகரில் வசித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நூர்ஜஹான் அளித்த தகவல்கள் சரிதானா என்பதை உறுதிசெய்ய வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நூர்ஜஹான் அளித்த தகவல்கள் தவறானவை எனத் தெரியவந்தது.
மேலும், தனது மகன்களின் கையெழுத்தையும் நூர்ஜஹானே போட்டு படிவத்தை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து நூர்ஜஹான், அவரது மகன்கள்மீது காவல்துறை வழக்கு பதிந்தது.

