திருப்பரங்குன்றம் வழக்கு தீர்ப்பளித்த நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய இண்டியா கூட்டணி வலியுறுத்து

2 mins read
f95f7661-484b-4a34-aedc-0709df20cf22
இண்டியா கூட்டணி சார்பாக கனிமொழி, டிஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்பிக்களும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் குழுவாகச் சென்று சபாநாயகரைச் சந்தித்தனர். - படம்: மாலை மலர்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இதையடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் மனுவை இண்டியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகரிடம் வழங்கப்பட்டது.

இண்டியா கூட்டணி எம்பிக்கள், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் மக்களவை சபாநாயகரை நேரில் சந்தித்தனர்.

நீதிபதி சுவாமிநாதன் வழக்குகளை தனக்கேற்ற அரசியல் சித்தாந்தத்தின்படி கையாள்கிறார் என்றும் அதை அறவே ஏற்க இயலாது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த பதவிநீக்கக் கோரும் நோட்டீசில், 120 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இதனிடையே, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.

இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்களும் கட்சிப் பிரமுகர்களும் பரவலாக கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார். தற்போது இண்டியா கூட்டணி அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவிநீக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து அதற்கான தீர்மானக் கடிதத்தை இண்டியா கூட்டணித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்