இந்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
நாட்டில் கள்ளப் பணத்தாள்களையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவும் வரி ஏய்ப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் ஏதுவாக 2016 நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், புதிய 500 ரூபாய் தாளும் 2,000 ரூபாய் தாளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இதனால், மக்கள் வங்கிகள், அஞ்சலகங்கள் முன்பும் தானியக்க வங்கி இயந்திரங்கள் முன்பும் வெகுநேரம் காத்திருந்து, பழைய 500, 1000 ரூபாய் தாள்களைக் கொடுத்து, புதிய பணத்தாள்களைப் பெற்றுச் சென்றனர்.
வரிசையில் நீண்டநேரம் காத்து இருந்தபோது முதியவர்கள் பலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இதனையடுத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பலரும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய். ஏ.எஸ்.போபண்ணா, பி.வி.நாகரத்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அம்மனுக்களை விசாரித்தது. அவர்களில் நீதிபதி நாகரத்னாவைத் தவிர்த்து, மற்ற நான்கு நீதிபதிகளும் அரசாங்கத்தின் முடிவிற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதைப் பார்க்கத் தேவையில்லை என்றும் அரசின் பொருளியல் கொள்கை முடிவைத் திரும்பப் பெறும்படி உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி கவாய் கூறினார்.
மாறாக, அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியே அதனை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்றும் நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டார்.
"அரசின் நடவடிக்கைகள் மனநிறைவு தருகிறது. எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது," எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

