புதுடெல்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையில் (எஸ்ஐஆர்) ஈடுபட்டுவரும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளும் (பிஎல்ஓ) மற்ற அதிகாரிகளும் மிரட்டப்படுவதாக வந்துள்ள புகார்களை அடுத்து, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணியை மேற்கொள்ளவிடாமல் அதிகாரிகளைத் தொடர்ந்து தடுப்பது ஒழுங்கின்மையை ஏற்படுத்திவிடும் என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) அது குறிப்பிட்டது.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு மாநில அளவில் எதிர்ப்பு அதிகரிக்கும் போக்கைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும்படி தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
“ஒத்துழையாமை, பிஎல்ஓக்கள் பணியை மேற்கொள்ளவிடாமல் தடுக்கப்படுவது போன்றவை குறித்து எங்கள் கவனத்திற்குக் கொண்டுவாருங்கள். நாங்கள் உரிய ஆணைகளைப் பிறப்பிக்கிறோம்,” என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் பிஎல்ஓக்கள் மிரட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சில வட்டாரங்களில் உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லது நிர்வாகத்தின் ஒத்துழையாமை காரணமாக எஸ்ஐஆர் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, எஸ்ஐஆர் தொடர்பில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
“அரசியல்வாதிகள் புகழ்பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்களோ எனக் கவலைப்படுகிறோம்,” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிட்டார்.
எஸ்ஐஆர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை மாநிலம் வாரியாகப் பிரிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அப்போதுதான் ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சினையையும் தனித்தனியாக விசாரிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாடு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், பொங்கல் திருநாளுக்குப் பிறகே புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்புவர் என்பதால் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
உத்தரப் பிரதேச மாநில மனுதாரரின் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள கால வரம்பு போதாது எனக் குறிப்பிட்டார்.

