புவனேஸ்வர்: வழக்குகள் தாமதமாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுவதும் நீதி மறுக்கப்படுவதும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார் இந்திய அதிபர் திரவுபதி முர்மு.
ஒடிசாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் முர்மு, புவனேஸ்வர் நகரில் ஒரு புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறத்து வைத்து உரையாற்றினார். அந்த உரையில், நேரம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று கூறியுள்ளார்.
பல வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு காலம் கடந்து, விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது போன்று வழக்குகளை ஒத்தி வைக்கப்படும் கலாசாரம் வளர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் பாதிக்கப்படுவது ஏழைகள் மட்டுமே. ஏனெனில், வழக்கு முடியும் வரை அவர்கள் அடிக்கடி நீதிமன்றத்திற்கு வர வேண்டும். அதற்குப் பணம் செலவாகும். அத்துடன் அவர்கள் வாதிடும் வலுவில்லாதவர்கள்.
எனவே, ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வழக்கை ஒத்தி வைக்கும் கலாசாரத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும். அதற்குச் சரியான வழியைக் கண்டறிய நீதிமன்றத்தில் இருக்கும் அனைவரும் முன்னுரிமை அளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழை, எளியவர்கள் நீதித்துறையினரிடம் அச்சமின்றி பேசுவதற்கான நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அந்த நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

