முஸ்லிம் மாணவிகள் முகத்திரை அணிய கர்நாடகா அனுமதி

முஸ்லிம் மாணவிகள் முகத்திரை அணிய கர்நாடகா அனுமதி

2 mins read
286484af-c128-4293-a359-8d57ec6ddc42
முகத்திரை, காவித்துண்டு போன்ற சமய அடையாளங்களுடன் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல கர்நாடக மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டு தடை விதித்தது. - கோப்புப்படம்: பிடிஐ
Google News Preferred Icon

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலக் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் முகத்திரை (ஹிஜாப்) அணிய விதிக்கப்பட்டிருந்த தடையை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு உடுப்பியில் தொடங்கிய இப்பிரச்சினை, பின்னர் மாநிலம் முழுவதும் பரவி பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, முகத்திரை மற்றும் காவித் துண்டு அணிவதற்கு 2022ஆம் ஆண்டில் தடை விதித்தது. அத்துடன், கல்வி நிலையங்களில் சமய அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவையும் அது நடைமுறைப்படுத்தியது.

தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ள கர்நாடக அரசு, அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதில், மாணவர்கள் அணியும் முகத்திரை, தலைப்பாகை, பூணூல், கைகளில் கட்டப்படும் புனிதக் கயிறு, ருத்ராட்சம் போன்றவை அவர்களின் ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் பூணூல் அணிந்து நுழைவுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் சிலர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், “வருங்காலத்தில் அத்தகைய சம்பவங்கள் நடைபெறாது. சமய அடையாள ஆடைகளை அணியும்படி மாணவர்களை வற்புறுத்த முடியாது. அதேபோல், சமய அடையாள ஆடைகளை அகற்றும்படியும் கூற முடியாது. ஆனால், தேசிய-மாநில அளவிலான நுழைவுத்தேர்வின்போது ஆடைக் கட்டுப்பாடுகளை அந்தந்த ஆணையங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்,” என்று கர்நாடகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பது பங்காரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்பு சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டு, அதனைப் பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்