புதுடெல்லி: அனைத்துலக அளவில் அதிகளவு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
எனவே, இந்திய உயர்கல்வி மாணவர்களும் ஆய்வாளர்களும் ஆய்வு வளங்களை எளிதில் அணுகும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ என்னும் பெயரில் மாபெரும் திட்டத்தை இந்தியக் கல்வி நிறுவனங்களுக்காக மத்திய அரசு 2025 ஜனவரியில் நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற 30 வெளியீட்டு நிறுவனங்கள் வெளியிடும் 13,000 ஆராய்ச்சி இதழ்களைப் படித்துப் பயன்பெறும் வகையில், இந்திய அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே தளம் வழியாக மதிப்புமிக்க பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்களை இலவசமாகப் படிப்பதற்கு “ஒரே நாடு ஒரே சந்தா” திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் ‘எல்ஸ்வீர்’, ஜெர்மனியில் இருந்து வெளிவரும் ‘ஸ்பிரின்ஜர் நேச்சர்’, ‘விலே’ போன்ற 13,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை மின்னியல் தளத்தில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் அந்த இதழ்களைப் படிப்பதற்கான அணுகலைப் பெற முடியும். இதன் மூலம் 18 மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘ஒரே நாடு ஒரே சந்தா’ என்னும் திட்டத்திற்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படும்.
ஒரே நாடு ஒரே சந்தா (ONOS) திட்டம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குக் கல்வி வளங்களைச் சமமாக அளிப்பதற்கு இந்திய அரசாங்கம் எடுத்துள்ள ஒரு முக்கியமான முயற்சி என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. “இந்திய அறிவியல் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நல்ல திட்டம்,” என்று இணையவாசிகள் பலரும் பாராட்டியுள்ளனர்.


