அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா மேக் படேல் என்ற தொழிலதிபரை கிராம மக்கள் பலரும் கடவுள்போல் பார்க்கின்றனர். இதற்குக் காரணம், அவரது கொடை வள்ளல் குணம்தான் எனக் குறிப்பிட்டுள்ளன ஊடகத் தகவல்கள்.
குஜராத்தின் நிஸ்ரயா கிராமத்தில் பிறந்தவர் மகேந்திரா மேக் படேல், 86. டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில், செயற்கை நுண்ணறிவியல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது நிஸ்ரயா கிராமத்தில் வசிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்குவதற்காக மகேந்திரா மேக் படேல் ரூ.100 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார்.
அத்துடன், அதிநவீன உயர்நிலைப் பள்ளியைக் கட்டிக் கொடுக்கும் கனவை நிறைவேற்றும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
“நான் இந்தியன் வங்கியில் ரூ.75 கோடிக்கு நிலையான வைப்புத்தொகை (fixed deposit) வைத்துள்ளேன். தற்போது அந்தப் பணத்தை நிஸ்ரயா கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்,” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நிஸ்ரயா கிராமத்தைச் சேர்ந்த 70 ஏழை மாணவர்கள் பி.ஏ., பி.காம்., பிசிஏ உள்ளிட்ட பட்டப்படிப்புகளைப் பயில ரூ.30 லட்சம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து அவரது உதவிக்கரத்தால், அந்தக் கிராமம் நல்ல வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சிசிடிவி கேமராக்கள், ஒவ்வொரு வீட்டிலும் கழிவறைகள் என வளர்ச்சி அடைந்துள்ளது.
தனது வாழ்க்கையில் ஓர் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதிலும் தன் சொந்த கிராமத்தை மறவாமல் ரூ.100 கோடி நிதியுதவி அளித்த மேக் படேலை பலதரப்பட்ட மக்களும் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

