ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், இறுதி வாதத்தின்போது முன் வைக்கவுள்ள முக்கிய அம்சங்கள் அடங்கிய பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தொகுப்பை பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என இவ்வழக்குடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்தே கர்நாடகா அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது.

அதில், இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கூட்டுப்பிழை உள்ளதாக கர்நாடகா அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதை முன்வைத்தே இறுதிவாதத்தை நடத்தப் போவதாக அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ள நிலையில், திமுக தரப்பிலும் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. கர்நாடக அரசும் திமுகவும் பதில் மனுவை தாக்கல் செய்த பிறகே ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதிவாதம் தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.