தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: கனிமொழி புகார்

சென்னை: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றார். “தமிழகத்தில் பல தொழில்கள் முடங்கிவிட்டன. இங்கிருக்கும் தொழில்கள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

சொந்த கட்சியைச் சேர்ந்த பழ.கருப்பையாவையே ஆள் வைத்து அடிக்கும் நிலையில்தான் தமிழக ஆளுங்கட்சி உள்ளது,” என்று கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில், மது விலக்கை அமல்படுத்த முடியாது என்பதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என்னென்னவோ காரணங்களைக் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதிமுக அரசுக்கு மக்கள் உயிரைப் பற்றி கவலையில்லை என்றும் மது மூலம் கிடைக்கும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்தான் அரசுக்கு முக்கியமாகப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.