சென்னை பாரிமுனையில் போலி உதிரிப் பாகங்கள் விற்ற 8 பேர் கைது

சென்னை: பாரிமுனையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி உதிரிப் பாகங்களை விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். “சென்னைப் பாரிமுனையில் உள்ள லிங்கி செட்டித் தெரு, அங்கப்ப தெரு, தம்பு செட்டித் தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு ஆகிய தெருக்களில் எங்களது நிறுவனத்தின் பெயரில் போலியான பேரிங்குகள் விற்பனை செய்யப்படுவதாக மும்பையில் உள்ள எஸ்கேஎஃப் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அப்பகுதிகளில் சென்னை காவல்துறையினர் சோதனையை முடுக்கிவிட்டனர்.

இதில், சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால், அந்தோணி சூசை, வேத்பிரகாஷ், பாலசுப்பிரமணியன், ராஜேஷ் குப்தா, திலிப் குமார், ராகுல் சர்மா, சந்தன்தாஸ் ஆகியோர் தங்களது கடைகளில் போலி பேரிங்குகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இந்தப் பெயரில் போலியாக பேரிங்குகளைத் தயாரிப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 8 பேரையும் காவல்துறை யினர் கைது செய்தனர். அவர்களின் கடைகளில் பல கோடி மதிப்புப்பெறும் பேரிங்குகள் கைப்பற்றப்பட்டன.