ஸ்மிருதி இரானி கூறியதை மறுத்த டாக்டர்

நகரி: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்து வந்த மாணவர் ரோகித் வெமுலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இரவு பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் ‘‘மாணவர் ரோகித் வெமுலா இறந்த விவகாரத்தை அரசியல் ஆக்க முயற்சி செய்தனர். “இதற்காக அவரது உடலைப் பார்க்க டாக்டர்களையோ, காவல் துறையினரையோ மாணவர்கள் அனுமதிக்கவில்லை. இதை அரசியல் ஆக்குவதற்காக மாணவரின் உடலை இரவு முழுவதும் ஒளித்து வைத்தனர். மாணவர் ரோகித் வெமுலா இறந்த மறுநாள் காலை 6.30 மணிவரை டாக்டர்கள் மற்றும் காவல்துறையினரை உள்ளே செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகுதான் டாக்டர்களும் காவல்துறையினரும் உள்ளே செல்ல முடிந்தது. இந்தத் தகவலைத் தெலுங்கானா காவல்துறையினர் அறிக்கையாக கொடுத்துள்ளனர்,’’ என்றார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்த பல்கலைக் கழக மருத்துவமனை டாக்டர் ராஜ், “மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தை அரசியல் ஆக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஜனவரி 17ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மாணவர் ரோகித் வெமுலா தூக்குப்போட்டுத் தற்கொலை செய்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நான் பல்கலைக்கழக விடுதிக்கு விரைந்து சென்றேன். அப்போது மாணவரின் உடலை கட்டிலில் தூக்கி கிடத்தி யிருந்தனர். அவரது உடலை நான் பரிசோதித்தபோது அவர் இறந்து 2 மணி நேரம் ஆகியிருந்தது,” என்று விளக்கினார்.

Loading...
Load next