சிரிப்பு நடிகர் சிங்கமுத்து: விஜயகாந்துக்கு தகுதியில்லை

கரூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வராகும் தகுதி கிடையாது என நடிகர் சிங்கமுத்துக் கூறினார். கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்மைக்காலமாக விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்பது மற்றவர்களுக்கு அறவே புரியவில்லை என்றார். “அவர் (விஜயகாந்த்) பேசுவது என்னவென்று அவருக்கே கூடத் தெரியாது. அவரிடம் முதல்வருக்கான தகுதிகள் இல்லை. மக்களும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்றார் சிங்கமுத்து.

மதுவிலக்கு குறித்து பேசுவதற்கு விஜயகாந்துக்கு எந்தவித அருகதையும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலோடு விஜயகாந்த் காணாமல் போய்விடுவார் என்றார். வைகோ பேசிப் பேசி அவரது பற்கள் தேய்ந்து போனதுதான் மிச்சம் என்றும், அவரால் ஒன்றும் சாதிக்க முடியாது என்றும் சிங்கமுத்து மேலும் கூறினார். இக்கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திமுக, காங்கிரசு கூட்டணி உருப்படாது எனக் கருணாநிதி யின் மகன் மு.க.அழகிரியே கூறிவிட்டதாகத் தெரிவித்தார். “ஏற்கெனவே கருணா நிதிக்கும் ஸ்டாலினுக்கும் அதிகார மோதல்கள் இருக் கின்றன. எனவே திமுகவால் வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது,” என்றார் தம்பிதுரை.