36 ஆண்டுகளுக்குப் பிறகு கடையநல்லூரில் வெற்றி

கடையநல்லூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 36 ஆண்டுகளுக்குப் பிறகு கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடையநல்லூர் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏணி சின்னத்தில் போட்டி யிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப் பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட்டன.

கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.ஏ.எம். முகமது அபூபக்கர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் வேட்பாளரான எஸ்.ஷேக்தாவூத்தை விட 1,194 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது அபூபக்கர் மற்றும் ஷேக் தாவூத் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் அபூபக்கருக்கு அஞ்சல் வாக்குகள் கைகொடுத்தன.