விக்னேஸ்வரனுக்கு ஜெயா, சம்பந்தனுக்கு கருணாநிதி நன்றி

சென்னை: இலங்கையின் வடகிழக்கு மாகாண தமிழர்கள் உரிய நீதி பெற இந்திய அரசின் வழி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற தமக்கு வாழ்த்து தெரிவித் துள்ள விக்னேஸ்வரனுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். “இலங்கைத் தமிழர் நலன் தொடர்பாக இருவரும் நிச்சயம் சந்திப்போம்,” என்றும் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், இலங்கைத் தமிழர்களுக்கான தனது ஆதரவு என்றும் எப்போதும் தொடரும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முன்னதாக கருணாநிதி 13ஆவது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்து சம்பந்தன் கடிதம் எழுதியிருந்தார்.