வீட்டின் மீது லாரி மோதியதில் ஐவர் பலி; நால்வர் காயம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் லாரி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; நால்வர் காயமடைந்தனர். லக்னோவில் நேற்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒரு வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி அருகே உள்ள இரண்டு வீடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. “லாரியில் மணல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அங்குள்ள சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம்,” என்று உயர் அதிகாரி சர்வேஷ் குமார் தெரிவித்துள்ளார்.