சென்னை: தமிழகத்திலும் கேரளாவிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் இந்தப் பருவமழையால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பல ஏரி, ஆறுகளில் நீர் நிரம்பும். கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு பகலாக மழை பொழிந்து வருகிறது. குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் நீர் கொட்டி வருகிறது. இந்தப் பருவ காலத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பலர் குற்றாலம் செல்வதுண்டு. ஆனால் அங்குள்ள பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தாலும் பேரிரைச்சலுடன் கொட்டும் அருவிகளைக் கண்டு ரசிக்கவும் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் நேற்று முன் தினம் மாலை பெய்த கனத்த மழையில் அதன் முக்கிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 5 செ.மீ. மழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.