அபுஜா: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாய் சீனிவாஸ் (படம்) என்பவர் நைஜீரியா நாட்டின் க்போக்கோ பகுதியில் உள்ள டங்கோட்டே சிமெண்ட் தொழிற்சாலையில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை சீனிவாசும் அவருடன் பணியாற்றும் மற்றோர் இந்தியரான அனிஷ் ஷர்மா என்பவரும் ஒரு வாக னத்தில் ஏறி வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் போக்குவரத்து சிக்னல் விளக்கு அருகே துப்பாக்கி முனையில் அந்த வாகனத்தை வழிமறித்த தீவிரவாதிகள் அவர்கள் இருவரையும் கடத்திச் சென்றனர்.
இதுதொடர்பாக, விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சாய் சீனிவாசின் மனைவி லலிதா என்பவர் கடந்த இருநாட்களாக கைபேசி மூலம் கணவரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவருடன் பேச முடியாமல் போனதையடுத்து, அவர் வேலை செய்யும் தொழிற்சாலையைத் தொடர்புகொண்டபோது, சாய் சீனிவாஸ் கடத்தப்பட்ட விவரம் தெரியவந்தது. விசாகப்பட்டின ஆட்சியரிடம் லலிதா அளித்த புகாரையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலமாக நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுக் காவல்துறையினர் கடத்தப்பட்ட இந்தியர்கள் இருவரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.