கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வன்முறை: 108 பேர் கைது

கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் (36) வியாழக்கிழமை இரவு மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட் டங்களில் நேற்று முன்தினம் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. சசிகுமார் உடல் பிரேதப் பரி சோதனை நடந்த கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திடீரென கடைகள் மற்றும் வழி பாட்டுத் தலங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியன சேதமடைந்தன.

வன்முறையின் உச்சக்கட்டமாக துடியலூரில் போலிஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. சில கடைகள் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குலில் 4 போலிஸ் ஏட்டுகள் காயம் அடைந்தனர். கோவை மாநகர் மற்றும் துடியலூரில் 20க்கும் மேற்பட்ட இடங் களில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு உக்கடம் ஆத்துப்பாலம் அருகே ஒரு தரப்பினர் திரண்டனர். வழிபாட்டுத் தலங்களைத் தாக்கியவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறிய அவர்கள் திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக உக்கடம், காந்தி புரம், ரேஸ் கோர்ஸ், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய போலிஸ் நிலையங்களில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 63 பேரை போலிசார் கைது செய்தனர்.

துடியலூரில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட போலிஸ் வாகனம். படம்: தமிழக ஊடகம்