ராகுல் மீது காலணியை வீசிய பத்திரிகையாளர் கைது

சீதாப்பூர்: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் மீது காலணி வீசிய நபரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரப்பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக கிஷன் யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டு விவசாயிகளையும் ஏழை மக்களையும் சந்தித்து வருகிறார். இதுவரை 2,200 கி.மீ., தூரம் பயணித்துள்ள ராகுல், நேற்று லக்னோவில் இருந்து 85 கி.மீ. தூரத்தில் உள்ள சீதாப்பூர் என்ற நகரில் திறந்தவெளி வேனில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது, அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. ஆனால், அந்தக் காலணி அவர் மீது விழவில்லை.

இது தொடர்பாக அனூப் மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். “கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டையே இருளில் தள்ளிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக உள்ளேன். அவர்கள் பதவியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்று அனூப் மிஸ்ரா கூறினார். அரசியல்வாதிகள் மீது கடந்த சில நாட்களாக காலணி வீசப்பட்டு வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இருப்பினும், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அளவுக்கு குறைவின்றி உள்ள ராகுல் மீது காலணி வீசப்பட்டது பல கேள்விகளையும் பலரிடமும் எழுப்பியுள்ளது.

Loading...
Load next