சமாஜ்வாடி தலைவர் மீது பெண் பாலியல் புகார்

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த சமாஜ்வாடி தலைவர் அசோக்பிரதான். இவர் மீது 24 வயது பெண் ஒருவர் போலிசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை அசோக்பிரதான்தான் ஏற்பாடு செய்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் போலிசில் புகார் கொடுத்துள்ளார்.
“குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை அசோக்பிரதான், பங்கஜ் ஜிந்தால் ஆகியோர் பலாத்காரம் செய்தனர். அவர்கள் மட்டுமல்ல; எனது மாமனாரும் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்,” என்று புகாரில் பெண் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அசோக்பிரதானிடம் கேட்டபோது, “இது வேண்டுமென்றே கூறப்பட்ட குற்றச் சாட்டு. அந்தப் பெண் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடரப் போகிறேன்,” என்றார்.